தமிழ்நாடு செய்திகள்

2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆட்சிக் கட்டிலில் அமர உழைப்பேன்- செங்கோட்டையன்

Published On 2025-02-15 09:57 IST   |   Update On 2025-02-15 09:57:00 IST
  • நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
  • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தேசப்பற்று மிக்க தலைவர்கள்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்கட்சித்தலைவர் ஆணையை ஏற்று இந்த பொதுக்கூட்டம் நடக்கிறது.

எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆரை நீக்கியபோது, 3 நாட்கள் யாரும் தெருவில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். வாழ்க என்று எழுதினால்தான் நடமாட முடியும் என்ற நிலை நிலவியது.

எம்.ஜி.ஆரின் கட்டளையை ஏற்று நாங்கள் 14 பேர் இணைந்து கோவையில் பொதுக்குழுவை, அவர் நினைத்தபடி வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். அதற்கான செலவுத்தொகையை அவர் கொடுத்தபோது, நீங்கள் எங்கள் தெய்வம், உயிர்மூச்சு என்று சொல்லி அதனை வாங்க மறுத்து விட்டோம்.

ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும்? என்ப தற்கு எம்.ஜி.ஆர். எடுத்துக் காட்டாக விளங்கினார். மக்களைப் பற்றி சிந்தித்து திட்டங்களை செயல்படுத்தினார். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட பகுதிகளுக்கு நீர் வழங்க திட்டம் தீட்ட வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளோம்.

நமது ஆட்சி அமைந்ததும் அனைத்து பகுதிகளுக்கும் நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 1980-ல் ஆட்சி கலைப்பின்போது, நடந்த மக்களவைத் தேர்தலில் கோபி மற்றும் சிவகாசியில் மட்டும் அ.தி.மு.க. வென்றது. அதன் பின் வந்த சட்டசபை தேர்தலில், நான் என்ன தவறு செய்தேன் என்று கேட்டு மக்களை எம்.ஜி.ஆர். சந்தித்தார்.

அதிக தொகுதிகளில் மக்கள் வெற்றியைக் கொடுத்தனர். மக்களவைத் தேர்தல் முடிவு வேறு, சட்டசபைத் தேர்தல் முடிவு என்று அவர் வேறுபடுத்திக் காட்டினார். 1984-ல் அமெரிக்காவில் இருந்தவாறு தேர்தலில் வென்று முதல்வராக தமிழகம் திரும்பினார். அதன்பின் இந்த இயக்கத்தை ஜெயலலிதா சிறப்பாக வழிநடத்தினார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இருவரும் தேசப்பற்று மிக்க தலைவர்கள். சீனா போரின்போது நிதியை வாரி வழங்கினர். அந்த இரு தெய்வங்களின் தேசப்பற்று குறித்து நாம் சிந்திக்க வேண்டும். அவர்களுக்காகத்தான், அடையாளம் தெரியாத எங்களுக்கும் நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தீர்கள்.

இன்றும் அந்த வெற்றி நிலைத்து நிற்கிறது. எம்.ஜி.ஆர். பெயரைச் சொன்னாலே வாக்களிக்க வாக்காளர்கள் தயாராக உள்ளனர். நான் எனது 25-வது வயதில் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிடும் பொழுது நான் யார் என்று கூட உங்களுக்கு தெரியாது.

ஆனால் எம்.ஜி.ஆர். என்ற ஒரு பெயரைச் சொல்லி வெற்றி பெற செய்தீர்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் கப்பலாக இருந்து கட்சியை வழிநடத்திச் சென்றவர் ஜெயலலிதா. அவர் மதுரையில் நடத்த பொதுக்கூட்டத்தில் செங்கோலை ஜெயலலிதாவிடம் கொடுத்துவிட்டு எனக்கு பின் கட்சியை நீ தான் வழி நடத்த வேண்டும் என கூறினார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இரண்டு பேருமே இரு பெரும் தெய்வங்கள். அந்த தெய்வங்கள் இல்லை என்றால் நாங்கள் இந்த மேடையில் இருக்க முடியாது. நீங்களும் எங்களுக்கு வாக்களித்திருக்க மாட்டீர்கள். தெய்வங்கள் ஆன பின்னும் கட்டளை இடுகின்றனர்.

நீங்கள் எங்களுக்கு வாக்கு அளிக்கின்றீர்கள். 2026 சட்டமன்ற தேர்தலில் தொண்டனாக இருந்து பாடுபட்டு அ.தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க அயராது உழைப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News