அடுத்தகட்ட நடவடிக்கை... 9-ந்தேதி செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்
- ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
- வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார்.
அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று முன்தினம் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது, வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கட்சியில் இருந்து விலகி சென்றவர்களை எல்லாம் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும். அதற்கு 10 நாள் கெடு நிர்ணயித்து இருக்கிறேன். அது நடக்கவில்லை என்றால் இதே கோரிக்கைகளை வலியுறுத்துபவர்களை எல்லாம் ஒன்றிணைப்பேன். எடப்பாடி பழனிசாமியின் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் பங்கேற்க மாட்டேன்' என்றார். இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே திண்டுக்கலில் அ.தி.மு.க. மூத்த தலைவர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கைக்கு பல்வேறு கட்சியினரும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்நிலையில், செங்கோட்டையன் வரும் 9-ந்தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், அப்போது முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை முக்கிய நிர்வாகிகளுடன் செய்தியாளர்களை செங்கோட்டையன் சந்திக்க உள்ளார். கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியவர்களை ஒருங்கிணைத்து, தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.