எருமை மாடு என்று யாரையும் திட்டாதீர்கள்... ஆடு மாடுகளுக்கு முன் சீமான் எழுச்சி உரை
- ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.
- ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்று சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் வளர்ப்பு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். என்னிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று அவர் தேர்தல் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் அரிதாகிவிட்டதையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளார்.
இதுபோன்ற சூழலில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
காடுகளை பாதுகாப்பதாக கூறி வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேய விடுவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆடு மாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆடு மாடுகளுடன் திரளாக கலந்து கொண்டார்கள்.
மாநாட்டில் ஆடு மாடுகளுக்கு முன் எழுச்சி உரையாற்றிய சீமான், "ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம். திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன்"
இனி யாரையாவது திட்ட வேண்டும் என்றால் எருமை மாடு என்று திட்டாதீர்கள். ஆடு, மாடுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் ஏன் ஆவின் விற்பனை செய்கிறீர்கள்? மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்?" என்று தெரிவித்தார்.