அஜித் குமார் கொலை வழக்கு: மதுரை மத்திய சிறையில் உள்ள 5 போலீஸ்காரர்களின் காவல் நீட்டிப்பு
- சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளனர்.
- கான்ப்ரன்ஸ் மூலம் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 போலீஸ்காரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்துள்ள மடப்புரத்தை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 29). இவர் பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் கொடுத்த நகை திருட்டு புகார் தொடர்பாக அஜித் குமாரை சட்ட விரோதமாக தனிப்பிரிவு போலீசார் அழைத்து சென்று கொடூரமாக தாக்கி விசாரணை நடத்தினர். இதில் படுகாயமடைந்த அஜித் குமார் பரிதாபமாக இறந்தார்.
அஜித் குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக சிறப்பு தனிப்படை போலீஸ்காரர்கள் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசாரால் தாக்கப்பட்டு அஜித்குமார் இறந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முதல் விசாரணை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது கான்ப்ரன்ஸ் மூலம் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 போலீஸ்காரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கு விசாரணை முடிவில் 5 போலீஸ்காரர்களுக்கும் வருகிற 30-ந்தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.