தமிழ்நாடு செய்திகள்

ஜூலை 4-ந்தேதி த.வெ.க. செயற்குழு கூட்டம் - புஸ்ஸி ஆனந்த் அறிவிப்பு

Published On 2025-06-27 09:18 IST   |   Update On 2025-06-27 09:19:00 IST
  • செயற்குழுக் கூட்டம் பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
  • தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில், வருகிற 4-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு, சென்னை, பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில், கழகத்தின் சார்பாக அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்தும், நம் வெற்றித் தலைவர் அவர்களின் நிகழ்வுகள் மற்றும் தொடர் மக்கள் சந்திப்புகள் குறித்த திட்டமிடல்கள் மற்றும் ஆலோசனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட உள்ளது.

எனவே, கழகச் சட்ட விதிகளின்படி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்களான - தலைமைக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழகச் சிறப்புக் குழு உறுப்பினர்கள், கழகத்தின் மாநில நிர்வாகிகள்/கழக மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலப் பொறுப்புச் செயலாளர்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சார்பு அணிகளின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மட்டும் பங்கேற்கும்படி, கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News