வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. - அமைச்சர் பெரியசாமி
- வரலாற்றில் இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் சாலை இல்லாத கிராமங்களுக்கு 23 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் 2-ம் கட்டமாக விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு அவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடும் நெருக்கடி இருந்தது. வருவாய் பற்றாக்குறையாக ரூ.60 ஆயிரம் கோடியை அ.தி.மு.க.வினர் விட்டுச் சென்றனர். அதன் காரணமாகவே மகளிர் உரிமைத்தொகை வழங்க சில மாதங்கள் தாமதமானது. இருந்தபோதும் ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்பட்டது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில் கூட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு முறையாக வழங்கப்படவில்லை. ஆனால் தி.மு.க. அரசு மக்களை ஏமாற்றாமல் சொன்னதை சொன்னபடி நிறைவேற்றி வருகிறோம்.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு தி.மு.க. அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் எந்த திட்டத்தையும் ஒழுங்காக செயல்படுத்தவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வதை மக்கள் நம்புவார்கள். ஆனால் பா.ஜ.க. குறைகூறுவதை அவர்கள் ஏற்கமாட்டார்கள். கடந்த 1½ ஆண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்டித்தரப்பட்டது எந்த ஆட்சியிலாவது நடந்ததுண்டா. ரூ.2 ஆயிரம் கோடி செலவில் ஒருலட்சம் வீடுகள் பழுது நீக்கம் மற்றும் 25 ஆயிரம் புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டுகளில் சாலை இல்லாத கிராமங்களுக்கு 23 ஆயிரம் கி.மீ. கிராமச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வன்னியர் இட ஒதுக்கீடு1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் தீர்மானமாக வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அறிவித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. தற்போது வன்னியர்கள் 10.5 சதவீத இடஒதுக்கீடு கேட்டு வருகின்றனர். ஆனால் 20 சதவீத இடஒதுக்கீட்டில் 13 சதவீதம் பேர் பயன் அடைந்து வருகின்றனர். என்னிடம் புள்ளி விவரம் உள்ளது. இதில் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர், பிரமலைக்கள்ளர், மறவர் என 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் உள்ளனர். அவர்களுக்கு பெரிய அளவில் ஒதுக்கீடு போவதில்லை.
வன்னியர் சமுதாயத்திற்கே கேட்கும் அளவை விட கூடுதலாக இருக்கிறது. கேட்பது அவர்களின் உரிமை. தனியாக பிரித்து வன்னியர்களுக்கு என கேட்கின்றனர். பொதுவாகத்தான் அரசு முடிவு எடுக்க முடியும். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் கொடுத்த இடஒதுக்கீட்டில் கன்னியாகுமரி கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு வேண்டாம் என பாதிரியாளர்கள் முதலமைச்சரிடம் கேட்டார்கள். அதனை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். 69 சதவீத இடஒதுக்கீட்டில் அனைத்து சமுதாயத்திற்கும் எவ்வளவு கொடுக்க வேண்டும் என முதலமைச்சர் முடிவு செய்வார்.
பா.ஜ.க.விற்கு இருக்கும் ஆயுதம் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேர்தல் ஆணையம் போன்றவை. வழக்கு போட்டு ஜனநாயக நாட்டில் ஒரு அரசை முடக்கலாம் என்று நினைத்தால் நடக்காது. எத்தனை வழக்கு போட்டாலும் நீதிமன்றத்தில் நிற்காது. பா.ஜ.க.விடம் உள்ள ஆயுதங்கள் பழுதடைந்தவை. ஆனால் எங்களின் ஆயுதம் வலிமையானவை.
இவ்வாறு அவர் கூறினார்.