தமிழ்நாடு செய்திகள்
ஓசூரில் கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்து தொழிலாளி பலி
- பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
- கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்ததில் சீனப்பா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி துவக்க பள்ளியில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடங்களை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக ஜே.சி.பி. மூலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.
இதையடுத்து இன்று காலை அந்த கட்டிடங்களை இடிக்கும்போது சுவர் சரிந்து விழுந்ததில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சீனப்பா (வயது55) என்பவர் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்த சீனப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.