தமிழ்நாடு செய்திகள்

சீர்காழியில் இரவில் பூத்த பிரம்ம கமலம் மலர்கள்- பொதுமக்கள் ஏராளமானோர் வணங்கி சென்றனர்

Published On 2025-12-13 13:58 IST   |   Update On 2025-12-13 14:15:00 IST
  • கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாவரத்தில் 2 மொட்டுக்கள் வந்தது.
  • நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.

சீர்காழி:

உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநில மலராகவும், இமயமலைப் பகுதிகளில் மட்டுமே பெரும்பாலும் காணப்படும் அதிசய மலராகவும் பிரம்ம கமலம் மலர் உள்ளது.

பிரம்மனின் நாடிக்கொடி என வர்ணிக்கப்படும் இந்த மலர், இளவேனில் காலத்தில் இரவுநேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அதிசய மலராகும். இந்த பூ மலர தொடங்கிய நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு பிறகே முழுமையாக மலர்ந்திருக்கும். அதேபோல் அதிகாலைக்குள் உதிர்ந்துவிடும் என்றாலும், இந்த பூவின் வாசம் அந்த பகுதி முழுவதும் வீசும்.

இந்த மலரின் செடி கள்ளிச்செடி வகையை சேர்ந்தது என கூறப்படுகிறது.

உலக வெப்பநிலை மாறுபாட்டால் அழிந்துவரும் இந்த தாவரத்தை காப்பாற்ற உத்தரகாண்ட் மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்த மலர் மலரும்போது அருகிலிருந்து நாம் நினைத்து வேண்டியது வரமாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இத்தகைய அதிசய பிரம்ம கமலம் தாவரம் சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளியில் வளர்க்கப்பட்டு வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தாவரத்தில் 2 மொட்டுக்கள் வந்தது. இந்தநிலையில் நேற்று இரவு இந்த தாவரத்தில் 2 மலர்கள் பூத்தது. இரவு 11 மணிக்கு மேல் அந்த மொட்டு மலர்ந்து வெண்ணிலவை போல அழகாக காட்சி அளித்தது.

இதுகுறித்து தகவலறிந்த அப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் நள்ளிரவிலும் வந்து பிரம்ம கமலம் மலரை பார்த்து வணங்கி சென்றனர்.

மேலும் அவர்கள் தங்கள் செல்போனில் பிரம்ம கமலம் மலருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதையடுத்து நள்ளிரவு 2 மணியளவில் பிரம்ம கமலம் மலரின் இதழ்கள் சிறிது சிறிதாக சுருங்கி பின்னர் உதிர்ந்தது.

Tags:    

Similar News