வடசென்னை அனல்மின்நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3-வது நாளாக இன்று பாதுகாப்பு ஒத்திகை
- மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
- பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய இடங்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்றும் (வியாழக்கிழமை), நேற்று முன்தினமும் (புதன்கிழமை) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நடத்தப்பட உள்ளது.
இந்த ஒத்திகை, நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் சென்னையை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையம் அலகு-2 ஆகிய இடங்களில் மாலை 4 மணிக்கு நடக்க உள்ளது.
இந்த பயிற்சியின்போது எதிரிகளின் தாக்குதல் மற்றும் எந்த விதமான அவசர கால சூழலையும் எதிர்கொள்வதற்கான ஆயத்த நிலை பரிசோதிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.