தமிழ்நாடு செய்திகள்

ஊரக வேலை வாய்ப்பு திட்டம்: நிலுவை தொகையை உடனே விடுவிக்க விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை

Published On 2025-12-12 21:29 IST   |   Update On 2025-12-12 21:29:00 IST
  • திட்டம் வாயிலாக இந்தியாவின் ஊரக பொருளாதாரம் மேம்பட்டதுடன் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
  • மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான கோடிகள் வழங்கப்படாததால் , கிராமப்புற மேம்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு நிலுவை தொகையினை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்காமல் தடுத்து வைத்துள்ள தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் நிதிகளை உடனே வழங்க வேண்டும் என இன்று மக்களவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின்போது 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தபட்டது.

இந்த திட்டம் வாயிலாக இந்தியாவின் ஊரக பொருளாதாரம் மேம்பட்டதுடன் லட்சக்கணக்கான மக்கள் ஏழ்மையின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டனர். பாஜக அரசு ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய நிதியினை படிப்படியாக நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மக்களவையில் இது குறித்து விவாதிக்க ஒத்துவைப்பு தீர்மானம் ஒன்றினை முன்மொழிந்துள்ளார்.

மத்திய அரசின் தாமதமான நிதி வெளியீடு காரணமாக ஏராளமான கிராமப்புற குடும்பங்களும் ஊராட்சிகளும் கடுமையான நெருக்கடியை எதிர் கொள்கின்றன. மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஆயிரக்கணக்கான கோடிகள் வழங்கப்படாததால் , கிராமப்புற மேம்பாட்டு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் பல மாதங்களாக கூலி பெறாமல் தவிக்கின்றனர். ஊராட்சிகள் செயலிழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளன. மாநிலங்களுடன் ஒத்துழைக்கும் நிலைக்கு பதிலாக மத்திய அரசின் அழுத்தங்கள் கூட்டாட்சி முறைக்கு அச்சுறுதலாக அமைந்துள்ளது.

மேலும் கிராமப்புற தொழிலாளர்கள் சுயமரியாதை இழந்து நிற்கின்றனர். இதன் காரணமாக பல மாநிலங்களில் தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலைமையை கருத்தில் கொண்டு, வழக்கமான அவைச் செயல்பாடுகளை நிறுத்தி உடனடியாக விவாதிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், மத்திய அரசு உடனடியாக நிலுவையில் உள்ள நிதிகளை முழுமையாக வழங்க வேண்டும், வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தடையின்றி அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News