அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆவி புகுந்துவிட்டதாக பரவும் வதந்தி
- கடந்த சில நாட்களாகவே மந்திரவாதி ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
- மாலை நேரங்களில் மட்டும் சங்கு ஊதிய மந்திரவாதி ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் வந்திருக்கிறார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும் அவர் கூறியுள்ள நிலையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஆவி புகுந்து விட்டதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
எம்.ஜி.ஆர். மாளிகை என்று அழைக்கப்படும் தலைமைக் கழக பகுதியில் கடந்த சில நாட்களாகவே மந்திரவாதி ஒருவர் சங்கு ஊதிக் கொண்டு சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது.
மாலை நேரங்களில் மட்டும் இது போன்று சங்கு ஊதிய அந்த மந்திரவாதி ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எல்லாம் வந்திருக்கிறார்.
இது பற்றி அறிந்ததும் அவரை பிடித்து அலுவலகத்தில் இருந்தவர்கள் யார் நீங்கள்? எதற்காக இதுபோன்று சங்கு ஊதிக்கொண்டு சுற்றுகிறீர்கள் என கேட்டு உள்ளனர். இதற்கு சரியாக பதில் அளிக்காமல் ஒரு வாரத்துக்கும் மேலாக நான் சங்கு ஊதிக் கொண்டிருக்கிறேன். இப்போதுதான் என்னை வந்து கேட்கிறீர்களா என கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதற்கிடையே சில நம்பூதிரிகள் அ.தி.மு.க. கட்சி தலைமை அலுவலகத்தில் முன்புறம் உள்ள சிலையை பின்பக்கமாக மாற்றி வைக்குமாறு அறிவுரை கூறியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சி அலுவலகத்துக்குள் ஆசைகள் நிறைவேறாத ஆத்மா ஒன்று ஆக்ரோஷமாக சுற்றி வருவதாகவும் நம்பூதிரிகள் தெரிவித்திருப்பதாக பரபரப்பான திகில் ஊட்டும் வகையிலான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது பற்றி அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்ட போது, அ.தி.மு.க. பற்றி பரப்பப்படும் வதந்திகளில் இதுவும் ஒன்றாகும். அதுபோன்று எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை என்று ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.