அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்- சட்ட வல்லுநர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை
- தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
- மாவட்ட செயலாளர்களுடன் நவம்பர் 5-ந்தேதிக்கு பிறகு ஆலோசனை நடத்த உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கினார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது,
தொடர்ந்து 53 ஆண்டுகளாக கட்சிக்காக பணியாற்றிய என்னிடம் விளக்கம் கேட்காமலே திடீரென நீக்கம் செய்தது வேதனையாக உள்ளது. எடப்பாடி பழனிசாமி 1989-ம் ஆண்டு தான் அ.தி.மு.க.வுக்கே வந்தார் என்பதை நினைவுப்படுத்துகிறேன். துரோகம் செய்வதில் நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால், அது எடப்பாடி பழனிசாமிக்கே அளிக்க வேண்டும். நான் இன்னும் அ.தி.மு.க. தொண்டனாகவே உள்ளேன். எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் எதுவும் அனுப்பாமல் கட்சியில் இருந்து நீக்கியது தவறு. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடருவேன் என்று கூறி இருந்தார்.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து கோபிசெட்டிபாளையத்தில் தனது இல்லத்தில் சட்ட வல்லுநர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா மற்றும் ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நவம்பர் 5-ந்தேதிக்கு பிறகு ஆலோசனை நடத்த உள்ளார்.
கொடநாடு வழக்கை 3 நாட்களுக்கு ஒரு முறை விசாரிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.