தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. இளைஞரணி தலைவராக ஜி.கே.மணி மகன் நியமனம்- ராமதாஸ் அறிவிப்பு

Published On 2025-10-02 11:18 IST   |   Update On 2025-10-02 11:18:00 IST
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்தார்.
  • நியமன கடிதத்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினார்கள்.

திண்டிவனம்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த நிலையில் அன்புமணியை கட்சி பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே அன்புமணி தலைவராக இருக்கும்போது இளைஞரணி செயலாளராக தமிழ்குமரனுக்கு பதவி வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து வானூர் அருகே நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்க பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே பொதுக்கூட்ட மேடையில் மோதல் போக்கு உண்டானது. அப்போது ராமதாஸ் நான் சொல்பவர்கள் கட்சியில் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் வெளியே போகட்டும். இது நான் ஆரம்பித்த கட்சி என்று பேசினார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து மீண்டும் தமிழ்குமரனுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பை டாக்டர் ராமதாஸ் தற்போது வழங்கி உள்ளார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, தமிழ்குமரனை நியமித்து உத்தரவிட்டார். அதற்கான நியமன கடிதத்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினார்கள். பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்குமரன் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Tags:    

Similar News