தமிழ்நாடு செய்திகள்

ஈகோ இருக்கக்கூடாது... சினிமா பிரபலங்களின் விவாகரத்து குறித்து பேசிய பிரேமலதா

Published On 2025-05-22 13:49 IST   |   Update On 2025-05-22 13:49:00 IST
  • கேப்டன் தான் என்னுடைய எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன்.
  • கேப்டனுக்கு அம்மா இல்லை. அம்மா பாசமே அவருக்கு தெரியாது.

நாமக்கலில் தே.மு.தி.க. சார்பில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

இதையடுத்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தமிழகம் முழுவதும் சினிமா பிரபலங்கள் பலரும் பல வருடம் வாழ்ந்து விட்டு விவகாரத்து செய்கின்றனர். ஏன் தெரியல. ஒன்னு மட்டும் சொல்றேன் கணவன்-மனைவிக்குள் உண்மையான புரிதல் இருக்கணும். ஈகோ இருக்கக்கூடாது. நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா என்று. புரிதல் இருக்கணும், விட்டுக்கொடுத்து வாழணும். அதுதான் வாழ்க்கை.

ஓ நீ இப்படியா, நான் அப்படின்னு வாழ்ந்தால் எப்படி அந்த குடும்பம் விளங்கும். அதுக்கான உதாரணங்கள் தான் இன்றைக்கு எத்தனை எடுத்துக்காட்டுகளை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஆனால் நான் பெருமையாக சொல்றேன்... கேப்டன் தான் என்னுடைய எல்லாமே என்று நினைத்து கேப்டனுக்காகவே வாழ்ந்தேன்.

எனக்காக எந்தவிதமான சுய விருப்பம் எதுவும் இல்லை. அவர் என்ன விரும்புகிறாரே அதுதான் என்னுடைய விருப்பம். அவர் என்ன சொல்றாரோ அதுதான் என்னுடைய சொல். அவர் என்ன செய்கிறாரோ அதுதான் என் செயல். இப்படி 1990 ஜனவரி 30-அன்று தாலி கட்டின மறுநிமிடமே என் வாழ்க்கையை கேப்டனுக்காக அர்ப்பணித்து விட்டேன். கேப்டன் எவ்வளவு பெரிய கோவக்காரர் தெரியுமா? அவருக்கு கோபம் அப்படி வரும். பொறுமையா பார்ப்பேன். அதனால தான் அவரை அறியாமலேயே ஒரு பேட்டியில் கேப்டன் சொல்லியிருக்கிறார், என்னுடைய மனைவி நிழல் சக்தி அல்ல நிஜ சக்தி.. அவள் என்னுடைய மனைவி மட்டுமல்ல என் தாய் என்று சொல்லியிருக்கிறார். அந்த பேட்டியை இப்போ தினமும் போட்டு பார்ககிறேன்.

கேப்டனுக்கு அம்மா இல்லை. ஒரு வயதாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். அம்மா பாசமே அவருக்கு தெரியாது. அதனால என்கிட்ட கேட்டாரு, அம்மா பாசம் தெரியாது. எனக்கு நீ சாப்பாடு ஊட்டி விடுவியா என்று கேட்டார். ஒரு நாள் இல்லை, இரண்டு நாள் இல்லை தினமும் நான்தான் அவருக்கு சாப்பாடு ஊட்டி விடுவேன். சூட்டிங் முடிந்து நடுராத்திரி எப்போது வந்தாலும் சூடாக சமைத்து ஊட்டிவிட்டு தான் படுப்பேன். ஏன் இதெல்லாம் சொல்றேன் என்றால் அந்த புரிதல் இருக்கணும். அந்த புரிதல் இருந்தால் இந்த விவகாரத்து எல்லாம் தூசி மாதிரி. எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளிக்கிற 'தில்' போதும். இளைஞர்கள், பெண்கள், மாணவிகள் இதை என்னுடைய அட்வைஸாக எடுத்துக்கணும் என்று பேசினார்.

Tags:    

Similar News