தமிழ்நாடு செய்திகள்

எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம்: விஜயகாந்த் இருந்தபோதே முதுகில் குத்தி விட்டனர்- பிரேமலதா

Published On 2025-08-07 14:13 IST   |   Update On 2025-08-07 14:13:00 IST
  • தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் மது கடை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும்.
  • ரேஷன் பொருட்கள் பொதுமக்கள் வீடு தேடி வரும்.

வேலூர்:

வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் மது கடை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும். ரேஷன் பொருட்கள் பொதுமக்கள் வீடு தேடி வரும். தே.மு.தி.க. நிர்வாகிகள் யார் பெரியவர் என்ற ஈகோவை மறந்து வருகின்ற தேர்தலில் பணியாற்றினால் வெற்றி என்ற மூன்றெழுத்து நமக்கு பரிசாக கிடைக்கும்.

இதன் மூலம் அதிக அளவில் வெற்றி பெறுவார்கள். விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது அவரின் முதுகில் குத்தி விட்டனர். கையெழுத்து போட்டு கொடுத்து விட்டு பின்னர் இல்லை என்று துரோகம் செய்துவிட்டனர். நாம் எவ்வளவோ துரோகிகளை பார்த்து விட்டோம்.

நமக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆளுங்கட்சியினர் என்ற எந்தவித ஆதரவும் இல்லை. நீங்கள் விஜயகாந்தை மனதில் வைத்துக் கொண்டு வெற்றிக்காக போராட வேண்டும். கடந்த ஒன்றை வருடங்களாக விஜயகாந்த் நினைவிடத்தில் ஏராளமான பொதுமக்கள் தினமும் வந்து கண்ணீர் வடிக்கின்றனர் என்று பேசினார்.

தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

குடியாத்தத்தில் மக்களைத் தேடி மக்கள் தலைவன் கேப்டன் என்ற ரதயாத்திரை தொடங்க இருக்கிறது.

நடைபயணத்துடன் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மக்களை சந்தித்து தொண்டர்களை சந்தித்து பேச இருக்கிறோம். தற்பொழுது முதல் கட்டமாக இந்த நடைபயணம் வரும் 23-ந்தேதியோடு நிறைவுக்கு வருகிறது. 24-ந்தேதி கேப்டனின் நினைவு நாள் முன்னிட்டு கேப்டன் அறக்கட்டளையிலிருந்து நல திட்ட உதவிகள் வழங்க இருக்கின்றோம்.

25-ந் தேதி விஜயகாந்த் பிறந்த நாள் அது எங்கள் கட்சிக்கு திருநாள். அவர் பிறந்த நாள் முடிந்து இரண்டாம் கட்ட பிரசாரம் தொடங்கும்.

மீண்டும் மக்களை தேடி மக்கள் தலைவன் என்கின்ற சந்திப்பை முடித்துப் பின்பு தான் யாருடன் கூட்டணி என்பதை நாங்கள் அறிவிப்போம் என்றார்.

Tags:    

Similar News