திருச்சியில் விஜய் பிரசாரத்தில் அரசு, தனியார் சொத்துக்கள் சேதம்?- த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு
- மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
- 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி:
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமது அரசியல் பிரவேசத்திற்கு பின் முதல் சுற்று பயணத்தை கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து தொடங்கினார். இதில் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து பிரசாரம் நடந்த மரக்கடை வரை 8 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க சுமார் ஐந்து மணி நேரம் ஆனது. இந்த நிலையில் தற்போது விஜய் பிரசாரத்தின் போது, மாநில அரசு மற்றும் தனியார் கடைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதாக 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் இளநிலை பொறியாளர் திவாகர் அளித்த புகாரில், டி.வி.எஸ்.டோல்கேட், மேம்பாலத்திற்கு கீழே அழகுபடுத்தப்பட்ட இடத்தை பாதுகாக்க அமைத்திருந்த துருப்பிடிக்காத எக்கு வேலி, விஜய் பேரணியின் போது தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டது.
பிரசார வாகனத்தைப் பின்தொடர்ந்தபோது, ஒரு பிரிவினர் பசுமையான இடத்திற்குள் நுழைந்து துருப்பிடிக்காத எக்கு கைப்பிடிகளை சேதப்படுத்தியதாக கூறப்பட்டிருந்தது. இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும் காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மரக்கடையில் பிரசாரம் நடைபெற்ற பகுதியிலும், தென்னூரைச் சேர்ந்த வியாபாரி எஸ். ரவிச்சந்திரன் என்பவர், மர தளவாடங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அடையாளம் தெரியாத தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களால் சேதப்படுத்தியதாக புகார் அளித்தார்.
புகார்தாரர், தனது கடையின் மேல் நின்று கொண்டு, கீழே இறங்கச் சொன்னபோது, கட்சி உறுப்பினர்கள் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி தன்னைத் திட்டியதாகவும் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.