தமிழ்நாடு செய்திகள்

ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் - ம.நீ.ம. பெண் நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு

Published On 2025-07-22 07:52 IST   |   Update On 2025-07-22 07:52:00 IST
  • ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர்.
  • இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர்.

சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மகளிர் அணி மாநில செயலாளராக இருப்பவர் சினேகா (வயது 32). இவர், நேற்று தனது தோழியுடன் வாடகை ஆட்டோவில் பயணம் செய்தார்.

அப்போது ஆட்டோவை தாறுமாறாக ஓட்டி சென்றது குறித்து சினேகா கேள்வி எழுப்பி உள்ளார். இதையடுத்து டிரைவர் பிரசாத்துக்கும், சினேகாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் சினேகா ஆட்டோ சாவியை பறிக்க முயன்றார். அப்போது ஆட்டோ டிரைவரும், சினேகாவும் மோதலில் ஈடுபட்டனர். இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கினர். அந்த வழியாக வந்த பொதுமக்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இருந்தபோதிலும் இருவரும் தாக்குதலை கைவிடவில்லை.

சம்பவம் குறித்து கேள்விப்பட்ட மயிலாப்பூர் போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். சினேகா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் பிரசாத்தை கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆட்டோ டிரைவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சினேகா மற்றும் அவரது தோழியுமே ஆட்டோ டிரைவர் பிரசாத்தை முதலில் ஒருமையில் திட்டி அவதூறாக பேசினர் என்பதும், அதன் பேரில் பிரசாத் அவர்களை ஆட்டோவிலிருந்து இறங்க சொன்னதும் தெரியவந்தது.

இதையடுத்து ஆட்டோ டிரைவர் பிரசாத்திடம் புகார் பெறப்பட்டு சினேகா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Tags:    

Similar News