பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் - 20 பேர் மீது வழக்குப்பதிவு
- ஆத்திரமடைந்த அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சிலர் ராஜேஷை தாக்கினர்.
- பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
பா.ம.க. அருள் எம்.எல்.ஏ. வின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இதற்கிடையே கண்காணிப்பு கேமரா (சி.சி.டி.வி.) வீடியோ காட்சிகளின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கார் மீது கல்வீச்சு சம்பவம் நடப்பதற்கு முன்பாகவே இருதரப்பினக்கும் வடுகத்தம்பட்டி பகுதியிலேயே மோதல் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
ராமதாஸ் அணி சார்பாக சேலம் தொகுதி எம்.எல்.ஏ. அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்ட கார்களில் நேற்று காலை 11.30 மணியளவில் வடுகத்தம்பட்டி பகுதிக்கு அஞ்சலி செலுத்த வந்தனர்.
அப்போது அந்த பகுதியில் பாக்கு காய்கள் காய வைக்கப்பட்டு இருந்தன. அந்த இடத்தில் ஏராளமான கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், துக்க வீட்டிற்கு சென்ற நேரத்தில் கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தின் அருகே இருந்த அன்புமணி ஆதரவாளரான விவசாயி ராஜேஷ் என்பவர், அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளரின் கார் கண்ணாடியை தட்டி இந்த இடத்தில் காரை நிறுத்த வேண்டாம், வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று சொன்னதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அருள் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் சிலர் ராஜேஷை தாக்கினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஏத்தாப்பூர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதன் தொடா்ச்சியாக தான் அருள் எம்.எல்.ஏ. சென்ற கார் மீது தாக்குதல் சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் அன்புமணி ஆதரவு மாவட்டச் செயலாளர் ஜெயபிரகாஷ், வன்னியர் சங்க மாவட்டச் செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.