தமிழ்நாடு செய்திகள்

பா.ம.க. பொதுக்குழு கூட்டம் - 3 ஆயிரம் பேருக்கு அன்புமணி அழைப்பு

Published On 2025-08-02 12:50 IST   |   Update On 2025-08-02 12:50:00 IST
  • அன்புமணி ராமதாஸ் வருகிற 9-ந்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டியுள்ளார்.
  • பா.ம.க. பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் கூட்டப்படுவது வழக்கம்.

சென்னை:

பா.ம.க.வில் டாக்டர் ராமதாசுக்கும்-அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தையும் இருவரும் தனித்தனியாக கூட்டியுள்ளார்கள். டாக்டர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனத்தில் 17-ந்தேதி சிறப்பு பொதுக்குழு நடக்கிறது.

அன்புமணி ராமதாஸ் வருகிற 9-ந்தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்டியுள்ளார். அதனால் அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் 'கான்ப்ளுயன்ஸ்' அரங்கில் கூட்டப்படும் பொதுக்குழுவிற்கு தீவிர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3300 பேர் அமர்வதற்கு இருக்கைகள் அமைக்கப்படுகிறது. அந்த 3300 பேருக்கும் டாக்டர் அன்புமணி சார்பில் அழைப்பு அனுப்பப்படுகிறது.

பொதுக்குழுவில் தற்போதைய அரசியல் நிலவரம், கூட்டணி விவகாரம், கட்சியில் ஏற்பட்டு உள்ள குழப்பம் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படுகிறது. டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்படும் பா.ம.க.விற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த பொதுக்குழு கூட இருக்கிறது.

பா.ம.க. பொதுக்குழு ஆண்டுக்கு ஒரு முறை ஜனவரி மாதம் கூட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்டது. ஆனால் தற்போது 2-வது முறையாக பொதுக்குழுவை கூட்டி தொண்டர்கள், நிர்வாகிகளை வரவழைத்து பேசி கட்சியை வலுப்படுத்த அன்புமணி திட்டமிட்டு உள்ளார்.

Tags:    

Similar News