தமிழ்நாடு செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு 5 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டம்

Published On 2025-08-21 13:55 IST   |   Update On 2025-08-21 13:55:00 IST
  • தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
  • தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணத்தை திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளி திங்கட்கிழமை வருவதால் சனி, ஞாயிறு விடுமுறையோடு 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதனால் சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ரெயில்களில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். நேற்று முன்தினம் இதற்கான முன்பதிவு தொடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே முக்கிய ரெயில்களில் அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன.

இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி முதல் ஏசி முதல் வகுப்பு வரை எல்லா படுக்கைகளும் நிரம்பி விட்டதால் காத்திருப்போர் பட்டியல் காணப்படுகிறது.

முன்பு போல காத்திருப்போர் பட்டியலில் 400 டிக்கெட் தற்போது கொடுப்பதில்லை. அதிகபட்சமாக 250 டிக்கெட் மட்டுமே கொடுக்க முடியும். அதனால் சொந்த ஊர் செல்லக்கூடியவர்கள் பயணம் உறுதியான டிக்கெட் மட்டுமே பெறுவதில் தீவிரமாக உள்ளனர்.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர், பெங்களூரு வந்தே பாரத் ரெயில்களிலும் இடமில்லை. இதேபோல கோவை செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிரம்பி காத்திருப்போர் பட்டியல் முடிந்து விட்டது. தீபாவளி பண்டிகைக்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக பயணம் செய்யக்கூடிய அனைத்து ரெயில்களும் நிரம்பி விட்டதால் சிறப்பு ரெயில்கள் அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு ரெயில்கள் விடுவது வழக்கம். எப்பொழுதும் ஒரு வாரத்திற்கு முன்பு தான் இந்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில் தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் இரண்டாவது வாரத்தில் சிறப்பு ரெயில் குறித்து அறிவிப்பு வெளியாகும். இது பகல் மற்றும் இரவு நேர பயணம் செய்யக்கூடிய வகையில் இயக்கப்படும்.

தென் மாவட்டங்கள் மற்றும் கோவை, கேரளா மார்க்கத்தில் கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும்.

இதற்கிடையில் எந்தெந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க சாத்தியப்படுமோ அதற்கு ஏற்ப பெட்டிகள் அதிகரிக்கப்படும்.

எனவே தீபாவளி பயண கூட்ட நெரிசலை குறைக்க எந்தெந்த வழித்தடங்களில் சிறப்பு ரெயில்கள் தேவைப்படுகிறது என்பதை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப சிறப்பு ரெயில்கள் விடப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News