தமிழ்நாடு செய்திகள்

அபாய சங்கிலியை பிடித்து இழுத்து பாம்பன் பாலத்தில் ரெயிலை நிறுத்திய பயணி- போலீசார் விசாரணை

Published On 2025-08-09 10:54 IST   |   Update On 2025-08-09 10:54:00 IST
  • ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் ஓகா வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.
  • 6 நிமிட தாமதத்திற்கு பின் பாம்பன் ரெயில் பாலத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது.

ராமேசுவரம்:

ராமநாதபுரம் மாவட்ட நில பகுதியையும், ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன்-மண்டபம் இடையே நடுக்கடலில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் புதிய ரெயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அண்மையில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த புதிய ரெயில் பாலத்தில் தற்போது ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ராமேசுவரம் ரெயில் நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை தோறும் ஓகா வாராந்திர விரைவு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று இரவு 10:30 மணி அளவில் பயணிகளுடன் ஓகா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. 15 நிமிடத்திற்கு பின் இந்த ரெயில் பாம்பன் புதிய ரெயில் பாலத்தை அடைந்தது. பாலத்தில் ரெயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. பாலத்தின் நடுவே அமைந்துள்ள செங்குத்து தூக்கு பாலத்தை கடந்து சென்ற போது அபாய சங்கிலியை பயணி ஒருவர் பிடித்து இழுத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் ரெயிலை மேற்கொண்டு இயக்காமல் தூக்கு பாலத்தின் நடுவில் நிறுத்தினார். தொடர்ந்து என்ஜின் டிரைவர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்கள் குறிப்பிட்ட ரெயில் பெட்டியில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பயணி ஒருவர் தவறுதலாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அதிகாரிகள் அந்த வாலிபரை எச்சரித்தனர். பின்னர் 6 நிமிட தாமதத்திற்கு பின் பாம்பன் ரெயில் பாலத்தில் இருந்து ரெயில் புறப்பட்டு சென்றது. நடுகடலில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் நடுவில் திடீரென ரெயில் நிறுத்தப்பட்ட சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News