நெல் ஈரப்பதம் - மத்திய குழுவினர் செங்கல்பட்டில் ஆய்வு
- தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது.
- செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.
செங்கல்பட்டு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், டெல்டா உட்பட பல்வேறு மாவட்டங்களில் சம்பா, தாளடி நெல் சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் இதுவரை 21 லட்சம் ஹெக்டேரில் நெல், சிறுதானியங்கள் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்த நெற்பயிரில் 3.60 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள 1,819 கொள்முதல் நிலையங்கள் மூலம் 9.67 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு முன்னரே தண்ணீரில் மூழ்கின. அறுவடை செய்த நெல்லும் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது. எனவே, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17-ல் இருந்து 22 சதவீதமாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து தமிழகத்துக்கு 3 குழுக்களை மத்திய உணவுத்துறை அனுப்பியுள்ளது.
இதன்படி முதல் குழுவில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் ஆர்.கே. ஷாகி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல் சா்மா, தனூஜ் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 2-வது குழுவில் அந்த நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங், ஷோபித், ராகேஷ் பரலா ஆகியோரும் 3-வது குழுவில் உதவி இயக்குநர் டி.எம்.பிரீத்தி, பிரியா பட், அனுபமா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
தமிழகம் வந்துள்ள இந்த 3 மத்திய குழுக்களும் இன்று தங்களது ஆய்வை தொடங்கினார்கள். அதன்படி முதல் குழுவினர் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் 77 நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இதில் அயப்பாக்கம், வெள்ள ப்பந்தல், தத்தலூர், வழுவத்தூர், ஈசூர், பூதூர், படாளம், கள்ளபிரான்புரம், பொளம்பாக்கம், கயப்பாக்கம் ஆகிய 10 இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் அவர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையங்களிலும் அவர்கள் சுமார் 15 நிமிடங்கள் ஆய்வு செய்தனர். அவர்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.
2-ம் குழுவினர் இன்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், வருகிற 27-ந்தேதி கடலூர் மாவட்டத்திலும் ஆய்வு மேற்கொள்கிறார்கள். 3-ம் குழுவினர் இன்று திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். நாளை தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய உள்ளனர்.
இந்த குழுக்கள் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நெல் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்து ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.