தமிழ்நாடு செய்திகள்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான நமது போராட்டம் தொடரும்- மு.க.ஸ்டாலின்

Published On 2025-05-17 20:27 IST   |   Update On 2025-05-17 20:27:00 IST
  • எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல், இன்னார்தான் படிக்க வேண்டும் என்பது ஆரிய பாஜக மாடல்.
  • மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எழுதிய தேசிய கல்விக் கொள்கை- 2020 எனும் மதயானை புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் எழுதிய 'தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை' புத்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,"

நாட்டில் கல்வி உள்ளிட்ட அனைத்தையும் காவி மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது" என்றார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-

புதிய தேசிய கல்விக் கொள்கை எனும் மதயானை தமிழ்நாட்டை நாசப்படுத்திட அனுமதிக்க மாட்டோம். கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை புதிய தேசிய கல்விக் கொள்கையால் நாசப்படுத்திட ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து நிற்போம். எல்லோரும் படிக்க வேண்டும் என்பது திராவிட மாடல், இன்னார்தான் படிக்க வேண்டும் என்பது ஆரிய பாஜக மாடல்.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை இடஒதுக்கீட்டை சிதைத்துவிடும். தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளையும் மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை சிதைத்து விடும்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வருவதற்கான போராட்டம் தொடரும். கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை என்றால் கல்வி எட்டாக்கனியாகிவிடும்.

புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ரூ.2,158 கோடியை தராமல் மத்திய அரசு அடம்பிடிக்கிறது. நாட்டிற்கே வழிகாட்டியாக இந்த விஷயத்திலும் உச்சநீதிமன்றம் சென்று வெற்றி பெறுவோம்.

இது புத்தக வெளியீட்டு விழா என்பதை விடவும் உரிமைக்குரல் எழுப்பும் விழா என்பதே சரியாக இருக்கும். மதயானை நூலாசிரியர் அன்பில் மகேஷை வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.

தேசிய கல்விக்கொள்கையின் பாதிப்புகள் என்ன என்பது மதயானை நூலில் எழுதப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்த ஒரே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலமாக மாவட்டந்தோறும் புத்தக கண்காட்சி, சர்வதேச புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News