தமிழ்நாடு செய்திகள்

நாங்குநேரி மாணவரை தாக்கிய வழக்கில் 2 வாலிபர்கள் கைது

Published On 2025-04-20 07:48 IST   |   Update On 2025-04-20 07:48:00 IST
  • கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
  • நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை. கடந்த 2023-ம் ஆண்டு சாதி ரீதியிலான தாக்குதலில் பலத்த காயம் அடைந்தார். இவர் தற்போது நெல்லை திருமால்நகர் குடியிருப்பில் வசித்து வருவதுடன், பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 16-ந் தேதி நெல்லை கொக்கிரகுளம் வசந்தம் நகர் விரிவாக்கம் பகுதிக்கு தனது இன்ஸ்டாகிராம் நண்பரை பார்க்க சென்றார். அப்போது அவரை அடையாளம் தெரியாத 4 பேர் தாக்கியதுடன், செல்போனையும் பறித்துச் சென்றனர்.

ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவன் மீண்டும் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

போலீசாரின் விசாரணையில் பாலகிருஷ்ணன் மகன் பரமேஸ் (வயது 20) என்பவர் தலைமையில், அவருடைய நண்பர்கள் சங்கர நாராயணன் (23), சக்திவேல் (19), சண்முக சுந்தரம் மற்றும் வேல்முருகன் ஆகியோர் சின்னத்துரையிடம் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு, அவரிடம் பணம் பறிக்கும் நோக்கத்தோடு சம்பவ இடத்துக்கு வரவழைத்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றது. இந்த நிலையில் சக்திவேல், சங்கரநாராயணன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான சங்கரநாராயணன் மீது பெருமாள்புரம் போலீஸ் நிலையத்தில் 2 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் பரமேஸ், சண்முகசுந்தரம், வேல்முருகன் ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே மாணவன் சின்னத்துரையை காங்கிரஸ் எஸ்.சி. துறை தலைவர் ரஞ்சன்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசி ஆறுதல் கூறி, நிதிஉதவியும் வழங்கினர்.

பின்னர் ரஞ்சன் குமார் கூறுகையில், 'நெல்லையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர் சின்னத்துரைக்கு வீடு வசதி, கல்வி வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோதல்கள் அதிகமாக நடந்து வருகிறது. பாளையங்கோட்டை பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்டது கண்டிக்கத்தக்கது. சாதி ரீதியான வன்முறைகளுக்கு எதிராக சிறப்பு தனி சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

Tags:    

Similar News