தமிழ்நாடு செய்திகள்

நாமக்கல் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்கள் உயிரிழப்பா?- வதந்தி பரப்பிய 2 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2025-10-30 12:24 IST   |   Update On 2025-10-30 12:24:00 IST
  • தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.
  • சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.

நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.

இதற்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என்று தெரிவித்துள்ளது.

நாமக்கல் தனியார் கல்லூரியின் விடுதியில் வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரால் கடந்த 27 மற்றும் 28-ந் தேதிகளில் பாதிக்கப்பட்ட 128 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினர். மேலும், உணவு தயாரிக்கும் இடத்தை ஆய்வு செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், சிலர் இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பியவர்கள் மீது நாமக்கல் மாவட்ட காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.

நாமக்கல் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு உட்கோட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எக்ஸல் குழும கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகள் விடுதிகளில் தங்கி படித்து வருகின்றனர்.

இந்நிலையில் 27.10.2025 (திங்கட்கிழமை) காலை சில மாணவர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு அவர்களில் சில மாணவர்கள் எக்செல் கல்லூரி மருத்துவ மையம் மற்றும் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் புறநோயாளிகளாக(OP) சிகிச்சை பெற்று உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி விடுமுறையை தொடர்ந்து தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் சென்றுவிட்டனர்.

மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ள நிலையில் அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் "Pokkiri Victor (@Pokkiri_Victor)" w "Phoenix Vignesh (@PhoenixAdmk) என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News