தமிழ்நாடு செய்திகள்

அணைப்பிள்ளையார் தடுப்பணையில் சீறிப்பாய்ந்து செல்லும் காட்டாற்று வெள்ளம்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Published On 2025-05-30 11:10 IST   |   Update On 2025-05-30 11:10:00 IST
  • 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது.
  • அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கூடலூர்:

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கேரளாவில் 10 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.

குறிப்பாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியான இடுக்கி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 23ந் தேதி 114 கன அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 127.85 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும் 14 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7741 கன அடி நீர் வருகிறது. இதனால் தமிழக பகுதிக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 100 கன அடியாக இருந்த நீர்திறப்பு 467 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 4234 மி.கன அடியாக உள்ளது.

லோயர் கேம்ப்பில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில் 42 மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட 4 எந்திரங்கள் மூலம் 168 மெகவாட் வரை மின்உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பெரியாறு அணையில் இருந்து ராட்சதகுழாய்களின் வழியாக திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டு இரைச்சல் பாலம் வழியாக 100 கனஅடி நீர் மட்டும் திறக்கப்பட்டது. இதனால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது. நேற்று 120 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல் விவசாயம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் நடைபெறுகிறது. வழக்கமாக ஜூன் 1ந் தேதி முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நீர்மட்டம் குறையும் பட்சத்தில் அதற்கேற்றபடி தாமதமாக திறக்கப்படும். தற்போது அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்பதாலும் வழக்கமாக திறக்கப்படுவதுபோல வருகிற 1ந் தேதி தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழக அரசுக்கு எடுத்துரைத்து தண்ணீர் திறப்பு குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 53.90 அடியாக உள்ளது. வரத்து 786 கன அடி. திறப்பு 72 கன அடி. இருப்பு 2545 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.80 அடி. வரத்து 15 கன அடி. இருப்பு 183.98 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 93.15 அடி. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 44.60 அடியாக உள்ளது. 9 கனஅடி நீர் வருகிறது. திறப்பு இல்லை.

தொடர் மழை காரணமாக மேகமலை, சுருளி, கும்பக்கரை உள்ளிட்ட அருவிகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு கருதி தடை விதித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். போடி, குரங்கணி, கொட்டக்குடி, டாப்ஸ்டேசன், போடிமெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழையால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மேலும் மீனாட்சி அம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய் செல்லும் கால்வாய் பகுதிகளில் மராமத்து பணிகள் நடைபெறுவதால் மதகுகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் தடுப்பணையில் நீரின் வேகம் அதிகரித்து காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆற்றுப் பகுதிக்கு செல்லவேண்டாம் என போலீசார், பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரியாறு அணை 82.6, தேக்கடி 43.2, கூடலூர் 9.6, உத்தமபாளையம் 11.8, பெரியகுளம் 4, சண்முகாநதி அணை 6.2, அரண்மனைபுதூர் 11.6, வீரபாண்டி 1.2, மஞ்சளாறு 2, சோத்துப்பாறை 2, வைகை அணை 2.4, போடி 5.2 மி.மீ. மழை அளவு பதிவானது.

Tags:    

Similar News