தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதியுதவி அறிவித்த முதலமைச்சர்

Published On 2024-12-10 17:19 IST   |   Update On 2024-12-10 17:21:00 IST
  • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.
  • உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

சென்னை:

திருப்பூர் மாவட்டம், காங்கயம், வெள்ளகோயில் செம்மாண்டாம்பாளையம் சாலையில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு – ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளகோவில் –செம்மாண்டாம்பாளையம் சாலை, பெரியசாமி நகர் அருகில் இன்று காலை வெள்ளகோவில், அகலரப்பாளையம்புதூர் அரசு ஆரம்பப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்துவந்த சரஸ்வதி (50), அதே பள்ளியில் பயிலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அகலரப்பாளையம் புதூரைச் சேர்ந்த மாணவிகள் செல்வி. ராகவி (10), செல்வி. யாழினி (8) ஆகிய இருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற டிராக்டரை முந்திச் செல்ல முயன்றபோது எதிர்பாராதவிதமாக டிராக்டரின் டிரைலர் மீது மோதிய விபத்தில் சரஸ்வதி, ராகவி ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

இவ்விபத்தில் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் யாழினிக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News