தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் அமித் ஷா பருப்பு வேகாது - அமைச்சர் ரகுபதி

Published On 2026-01-06 12:58 IST   |   Update On 2026-01-06 12:58:00 IST
  • பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
  • மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரேஷன் கார்டுக்கு இன்று 3000 ரூபாய் அறிவித்துள்ளோம். இதுவரை தமிழக வரலாற்றில் 2500க்கு மேல் கொடுக்கப்படவில்லை. 3000 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு விடுவார்கள் என நம்புகிறீர்களா..?

எங்களது திட்டங்களை வைத்து தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். முதல்வரின் திட்டங்கள் மக்களை சென்றடைந்துவிட்டன. தமிழகத்தில் நாங்கள் அமித் ஷாவை மண்ணை கவ்வ வைப்போம்,

உதயநிதியை முதலமைச்சர் என்று எப்போதும் நாங்கள் சொல்லவில்லை. துணை முதலமைச்சர் என்றுதான் கூறி வருகிறோம்.

இந்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் தான். எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலின் தலைவராக வரலாம். தேர்தல் பணிக்காக அவர் இன்று சுழன்று பணியாற்றி வருகிறார்.

ஊழல் குற்றச்சாட்டு குறித்து கருத்து சொல்கிற தகுதி எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. அவர்தான் ஒண்ணாம் நம்பர் ஊழல்வாதி.

அமித் ஷா மேடை ஏறுவதற்கு தாமதமாவதற்கு கூட்டம் இல்லாததே காரணம். தமிழகத்தில் அமித் ஷாவுக்கு இடம் கிடையாது. பா.ஜ.க. பருப்பு தமிழகத்தில் வேகாது.

பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க.வே இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. முதலில் கூட்டணி கட்சிகளின் கூட்டம் தான் என்று அவர்கள் அறிவித்தார்கள். ஆனால் நேற்று நடந்த கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொள்ளவில்லை. அமித் ஷா சொல்வதை கூட்டணி கட்சிகளிடமே நடக்கவில்லை. அப்புறம் எங்கு வெளியே நடப்பது.

தமிழக அமைச்சர்கள் ஊழலில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று உள்துறை அமைச்சர் கூறுவது தான் வேடிக்கையானது.

காங்கிரஸ் கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அது எங்கள் பிரச்சனையாகாது. இந்தியா கூட்டணி தமிழகத்தில் மிக பலமாக உள்ளது. இங்கிருந்து எந்த கட்சியும் வெளியே செல்லாது . மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

எங்களுடைய வெற்றி தெளிவாக உள்ளது தைரியமாக நாங்கள் உள்ளோம். எதைப் பற்றியும் நாங்கள் கவலைப்படக்கூடிய அவசியம் கிடையாது. எங்களுக்கு அடுத்தது யார் என்பது தான் தற்போது பிரச்சனை.

முதல்வர் சில தினங்களுக்கு முன் அறிவித்த ஓய்வூதிய திட்டம் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் எந்த எதிர்மறை கருத்துக்களும் அவர்களிடம் இருந்து வரவில்லை.

90 நாட்களில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று அண்ணாமலை கூறி வருகிறார். எந்த 90 நாட்கள் என்று அவர் தெரிவிக்கவில்லை. அண்ணாமலை எதையாவது சொல்லிக் கொண்டே தான் இருப்பார் அதைப்பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்பட அவசியமில்லை.

தமிழக அமைச்சர்கள் கருப்பு பணத்தை வெள்ளையாக்கி வருகிறார்கள் என்று நேற்று அமித் ஷா கூறியுள்ளார். நாங்கள் எங்கும் வெள்ளை பெயிண்ட் அடிக்கவில்லை.

தி.மு.க. மீது எதையாவது பழி சுமத்த வேண்டும் என்பதற்காக கரூர் சம்பவத்திற்கும் செந்தில்பாலாஜிக்கும் சம்பந்தம் உள்ளது என்று பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி வருகிறார் . இது அவருடைய கண்டுபிடிப்பு. எங்கள் மீது பழி போட முடியாது.

தமிழகத்திற்கு வழக்கமாக ஒதுக்க வேண்டிய நிதியை தான் மத்திய அரசு ஒதுக்கியது. எங்களுக்கு சிறப்பு நிதி எதுவும் வரவில்லை என்று தான் நாங்கள் கூறுகிறோம்.

மற்ற மாநிலங்களுக்கு கூடுதலாக நிதி ஒதுக்கும்போது தமிழகத்தை மற்றும் மத்திய அரசு வஞ்சிக்கிறது.

காங்கிரஸ் வெளியேறப் போகிறது என்று எடப்பாடி பகல் கனவு கண்டு வருகிறார். தி.மு.க.வை குறை கூற எடப்பாடிக்கு ஒரு சதவீதம் கூட தகுதி கிடையாது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

பேட்டியின்போது உடன் கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னதுரை, புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாகத்அலி இருந்தனர்.

Tags:    

Similar News