தமிழ்நாடு செய்திகள்

பகல் கனவு காணும் பாஜக: தண்ணீர் இல்லாத கிணற்றில் யார் குதிப்பார்கள்? - அமைச்சர் பெரியசாமி

Published On 2025-06-12 13:55 IST   |   Update On 2025-06-12 13:55:00 IST
  • கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.
  • தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணைகளை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கேள்வி : தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் கூறியதற்கு?

பதில் : திட்டங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் ஒவ்வொரு துறையிலும் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சண்முகம் இதை கூறினாரா? என்று எனக்குத் தெரியவில்லை. அவர் கூட்டணியில் அதிக இடங்கள் வேண்டும் என கூறியுள்ளார். அது அவரின் உரிமை. 7 ஆண்டு காலமாக ஒரு தூசி கூடப்படாமல் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணியை பார்த்து வருகிறார்.

இந்தியாவில் வலதுசாரிகள் ஒரு பக்கமும் இடதுசாரிகள் ஒரு பக்கமும் உள்ளனர். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் ஜனநாயக கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. எந்த பிரச்சனையும் இல்லை. எந்த திட்டங்கள் எனக்கூறினால் அதனையும் நிறைவேற்றித் தர எங்களது முதல்வர் தயாராக உள்ளார்.

கேள்வி : தி.மு.க. கூட்டணியில் இருந்து முக்கிய கட்சிகள் விலக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியது பற்றி?

பதில் : அது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். கண்கள் தெரியும் போதே தண்ணீர் இல்லாத பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள். தண்ணீர் இருந்தால் குதிக்கலாம். தண்ணீர் இல்லாமல் எப்படி குதிக்க முடியும்.

இந்தியாவில் தலைசிறந்த அரசாக தலைசிறந்த மாநிலமாக தலை சிறந்த முதலமைச்சராக தமிழ்நாட்டில் திட்டங்கள் வளர்ச்சியிலிருந்து எல்லோரிடத்திலும் முதன்மையான அரசாங்கம் எல்லாத்துறைகளும் உயர்ந்துள்ளது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 100க்கு 100 சதவீதம் வந்துள்ளது என்றால் படிப்பதற்கு ஆர்வமாக வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் போகாத பள்ளிக்கூடங்களிலும் மாணவர்கள் நிரம்பி வழிகின்றனர். கல்லூரிக்கு சென்றால் பணம், பள்ளிகளில் காலை உணவு, மதிய உணவு உள்ளது. படிப்பதற்கு இலவசம், கல்லூரி வரை இலவசம் எல்லாமே இலவசம். ஆனால் இதனை இலவசம் என கூற மாட்டேன். கட்டணமில்லா கல்வி பெறுவதற்கு முதலமைச்சர் வலியுறுத்தி வருகிறார்.

கேள்வி : ஆட்சி, அதிகாரத்தில் பங்கு குறித்து?

பதில் : ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை. கடந்த 6 முறை ஆட்சிக்கு வந்துள்ளோம். 7 வது முறையும் தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வருவார்.

தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி தான் வெற்றி பெறப்போகிறது.

கேள்வி : கூட்டணி கட்சிகள் அதிக இடங்கள் கேட்பது குறித்து?

பதில் : நான் சாப்பிட வேண்டும் என்றால் எனக்கு மூன்று புரோட்டாக்கள் வைத்தால் சாப்பிட முடியாது. 2 அல்லது 3 இட்லிகள் தான் சாப்பிட முடியும். அவரவர் தகுதிக்கு ஏற்றாற் போல் கடந்த காலங்களில் எந்தெந்த இயக்கங்களுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதோ அந்த அடிப்படையில் முதலமைச்சர் முடிவு செய்து வழங்குவார். எந்தக் கூட்டணியும் எங்களை விட்டு போகாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News