'குட் பேட் அக்லி' படம் பார்த்த அமைச்சர் கீதா ஜீவன்: விஜய்க்கு எதிராக அஜித் - காய் நகர்த்தும் திமுக?
- விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் நடிகர் அஜித்தை திமுகவினர் தொடர்ச்சியாக பாராட்டி வருகின்றனர்.
- அஜித் கார் ரேசிங்கில் கலந்துகொண்டதை உதயநிதி பாராட்டி பதிவிட்டிருந்தார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.
இந்நிலையில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படம் பார்க்க தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கம் சென்ற அமைச்சர் கீதா ஜீவனுக்கு அஜித் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திரையரங்கில் அஜித் ரசிகர்கள் ஏற்பாடு செய்து இருந்த பிரமாண்டமான கேக்கை அமைச்சர் கீதா ஜீவன் வெட்டினார். இதையடுத்து அஜித் ரசிகர்களுடன் இணைந்து 'குட் பேட் அக்லி' படத்தை அமைச்சர் கீதா ஜீவன் கண்டு ரசித்தார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கி திமுக மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வந்த பின்னர் சினிமாவில் அவருக்கு போட்டியாக இருந்த நடிகர் அஜித்தை திமுகவினர் தொடர்ச்சியாக பாராட்டி வருகின்றனர்.
அஜித் கார் ரேசிங்கில் கலந்துகொண்ட சமயத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி உட்பட பல திமுக அமைச்சர்கள் அஜித்தை பாராட்டி பதிவிட்டனர்.
திமுகவிற்கு எதிரான அரசியலை விஜய் முன்னெடுத்து வருவதால், அஜித் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக தான் அஜித்தை திமுகவினர் தற்போது பாராட்டுகின்றனர் என்று விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தை அஜித் ரசிகர்களுடன் அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று பார்த்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.
இணையத்தில் நடக்கும் விஜய் ரசிகர்கள் - அஜித் ரசிகர்கள் மோதலை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் ஒருவேளை திமுகவிற்கு போட்டியாக விஜய் உருவெடுத்தால், அவருக்கு எதிராக அஜித் ரசிகர்களை பயன்படுத்துவதற்காக தான் திமுகவினர் நடிகர் அஜித்தை பாராட்டி வருகின்றனர் என்று சொல்லப்படுகிறது.