கட்சிப் பதவி பற்றி கவலை இல்லை- காட்பாடி தொகுதியில் மீண்டும் சீட் வேண்டும்: அடம்பிடிக்கும் அமைச்சர் துரைமுருகன்
- சாதனை விளக்க பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
- கட்சிக்கு உழைக்காதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருக்கும் அமைச்சர் துரைமுருகன் கட்சியில் ஓரம் கட்டப்படுகிறார். அவருக்கு இந்த முறை பொதுச்செயலாளர் பதவி இல்லை.
50 ஆண்டுகாலமாக எம்.எல்.ஏ. பதவி வகித்து வரும் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சட்டசபையில் நீண்ட நாள் உறுப்பினர் என்ற சாதனையை தகர்த்து விடுவார்.
இதனால் இந்த முறை காட்பாடி தொகுதியிலும் அமைச்சர் துரைமுருகனுக்கு போட்டியிட சீட் கிடைக்காது என்றும் பரவலாக பேசி வருகின்றனர்.
ஆனால் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் அமைச்சர் துரைமுருகன் இந்த வயதிலும் கட்சி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்.
கடந்த சில நாட்களாக காட்பாடி தொகுதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் துரைமுருகன் அந்த தொகுதியில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டு உள்ளார்.
மேலும் சாதனை விளக்க பொதுக் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசுகிறார்.
காட்பாடி தொகுதி எனக்கு கோவில். இந்த தொகுதி மக்கள் தான் என் தெய்வம் என தொடர்ந்து பேசி வரும் துரைமுருகன் ஒருபோதும் காட்பாடி தொகுதியை விட்டுக் கொடுக்க மாட்டார். அவர் மீண்டும் போட்டியிடுவார் என ஒரு தரப்பினர் சொல்லி வருகின்றனர்.
கட்சிப் பதவியைப் பற்றி கவலை இல்லை. ஆனால் காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் மீண்டும் போட்டியிடுவது உறுதி என அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதியில் உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டுள்ள துரைமுருகன் அங்குள்ள வார்டு செயலாளர்கள் முதல் கட்சி நிர்வாகிகள் வரை தனித்தனியாக சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் தேர்தலில் தி.மு.க. வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும். கட்சிக்கு உழைக்காதவர்கள் ஓரம் கட்டப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.
இது துரைமுருகன் மீண்டும் காட்பாடியில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளது.