நாளை ம.தி.மு.க.வின் 31-வது மாநில பொதுக்குழு கூட்டம்: முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
- கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
- 3.30 மணியளவில் வைகோ செய்தியாளர்களை சந்திக்கிறார்.
ஈரோடு:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு கட்சிகள் இப்போதே வியூகம் வகுத்து வருகின்றன. அதன்படி ம.தி.மு.க.வும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
இந்நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ம.தி.மு.க.வின் 31-வது மாநில பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது. ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு பொதுக்குழு கூடுகிறது. அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமை தாங்குகிறார்.
பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி, துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என தமிழக முழுவதும் இருந்து 1,700 பேர் பங்கேற்கிறார்கள். காலை 11:30 மணிக்கு பொதுக்குழுவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மதியம் வைகோவும், அதைத்தொடர்ந்து துரை வைகோ பேசுகின்றனர்.
கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்தும், வரும் சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இதே போல் சில முக்கிய தீர்மானங்கள், அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணியளவில் வைகோ செய்தியாளர்களை சந்திக்கிறார்.
இதுபற்றி, கொங்கு மண்டல ம.தி.மு.க., மூத்த நிர்வாகி கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் ம.தி.மு.க.,வின் பொதுக்குழுவை பிரமாண்டமாக நடத்துவதுடன், கட்சி நிர்வாகம், கூட்டணி, தேசிய அரசியலில் முக்கிய முடிவுகளை அங்கு அறிவிப்பு செய்வார்கள். கட்சியின் நிர்வாகிகள் மாற்றம், பதவி அறிவிப்பு கூட அப்போது நடக்கும். கடந்த, 30-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில், 2024 ஆகஸ்ட் 4-ல் நடந்தது. அக்கூட்டத்தில், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு, 'நீட்' தேர்வு உள்ளிட்ட தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை கலைக்கப்பட வேண்டும், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடன் நடத்த வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் மத்திய அரசை முன்வைத்து நிறைவேற்றினர். அதை மையமாக கொண்டு ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டம் திட்டமிடப்பட்டது.
இச்சூழலில், ஈரோட்டில் நடக்கும் பொதுக்குழு கூட்டத்தில் வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் எத்தனை தொகுதிகளை பெறுவது, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், வி.சி.க., போன்ற கட்சிகள் 'கூடுதல் இடம் கேட்போம்' என குரல் கொடுக்கும் நிலையில், ம.தி.மு.க.,வின் நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிப்பார்கள்.
ஈரோடு உட்பட கொங்கு மண்டலத்தில் மறைந்த எம்.பி., கணேசமூர்த்திக்கு பின், வலுவான ஒருங்கிணைப்பாளர் இல்லை என்பதால், வரும், 2026 சட்டசபை தேர்தலில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் ம.தி.மு.க.வுக்கு 'சில தொகுதிகளை வழங்கி' முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்த வாய்ப்புள்ளது. ஏற்கனவே கணேசமூர்த்தி எம்.பி., எம்.எல்.ஏ.,வாக இப்பகுதியில் இருந்ததால், தங்களுக்கான அங்கீகாரத்தை பெற வலியுறுத்துவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் காரணமாக நாளை நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.