தமிழ்நாடு செய்திகள்

 கைதானவர்கள்

காரைக்குடி பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

Published On 2025-11-01 11:13 IST   |   Update On 2025-11-01 11:13:00 IST
  • ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் பழனியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.
  • கடந்த 27-ந் தேதி பழனியப்பன் பொன்னகர் பகுதியில் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் வசித்து வந்தவர் பொறியாளர் பழனியப்பன். இவர் பா.ஜ.க. நிர்வாகியாகவும் உள்ளார். இவருக்கு சொந்தமாக வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்குள்ள ஒரு கடையை மூர்த்தினி வயல் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் என்பவர் வாடகைக்கு எடுத்து நிதி நிறுவனம் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சாந்தகுமாரின் நடவடிக்கையால் அவரை கடையை காலி செய்யுமாறு பழனியப்பன் கூறியுள்ளார். இதனால் 2 பேருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் பழனியப்பனின் தாயார் அமுதா தன்னிடம் ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக சாந்தகுமார் காரைக்குடி போலீசில் புகார் செய்தார். போலீஸ் விசாரணையில் பழனியப்பன் மீதான முன் விரோதத்தில் போலியான அவணங்களை தயாரித்து சாந்தகுமார் பொய் புகார் அளித்ததாக தெரிகிறது.

இதையடுத்து சாந்தகுமாரையும் உடந்தையாக இருந்த அவரது நண்பர் கணேசன் என்பவரையும் காரைக்குடி தெற்கு போலீசார் கடந்த ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஜாமீனில் வெளிவந்த 2 பேரும் பழனியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக கூலிப்படையை நாடி உள்ளனர்.

கடந்த 27-ந் தேதி பழனியப்பன் பொன்னகர் பகுதியில் கட்டிட பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கூலிப்படையினர் அரிவாளால் சரமாரியாக வெட்டி பழனியப்பனை கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலையாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என பழனியப்பன் உறவினர்கள் 2 நாட்கள் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காரைக்குடி ஏ.எஸ்.பி. ஆஷிஷ் புனியா பேச்சு வார்த்தை நடத்தி குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.

இதனை தொடர்ந்து கூலிப்படையை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். முக்கிய குற்றவாளிகளான சாந்தகுமார், அவரது நண்பர் கணேசன் ஆகியோர் தலைமறைவாகினர். இந்த நிலையில் அவர்கள் 2 பேரையும் நேற்று அழகப்பாபுரம் போலீசார் கைது செய்தனர். 

Tags:    

Similar News