மதுரையில் அனுமதியின்றி, விஜய் ரோடுஷோ நடத்தினால் நடவடிக்கை- போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
- மதுரை வந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார்.
- தொண்டர்கள் இன்று காலை முதலே விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் 'ஜன நாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக இன்று மாலை விஜய் தனி விமானம் மூலம் மதுரை வந்து சாலை மார்க்கமாக கொடைக்கானலுக்கு செல்ல உள்ளார். விஜய் மதுரைக்கு வருவது குறித்து அறிந்த கட்சியின் தொண்டர்கள் இன்று காலை முதலே விமான நிலையத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் மதுரை விமான நிலையத்திற்கு வரும் விஜய் ரசிகர்களுக்காக ரோடுஷோ நடத்தி அவர்களை உற்சாகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோக நாதன் தெரிவிக்கையில், விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மாலை மதுரை விமான நிலையத்திற்கு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால் அவர் ரோடு ஷோ நடத்துவது குறித்து போலீசாரிடம் இதுவரை அனுமதி கேட்கப்படவில்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அனுமதியின்றி விஜய் ரோடுஷோ நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.