தமிழ்நாடு செய்திகள்

பொன்முடி மீதான வழக்குகள் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படும்- ஐகோர்ட் எச்சரிக்கை

Published On 2025-07-04 14:57 IST   |   Update On 2025-07-04 14:57:00 IST
  • தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.
  • அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும்.

சென்னை:

பெண்கள் குறித்தும் சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேச்சு வெறுப்பு பேச்சு வரம்புக்குள் வருவதால், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி அவருக்கு எதிராக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததைச் சுட்டிக்காட்டி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன்படி, பொன்முடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்கு, நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், பொன்முடியின் பேச்சு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நேரத்தில் தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்பின், பொன்முடிக்கு எதிராக 3 போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் மீது விசாரணை நடத்தியதில், அவரது பேச்சு வெறுப்பு பேச்சு வரம்பில் வராது எனக்கூறி, அந்த புகார்கள் முடித்து வைக்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

அதன்பிறகு, தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் மீது புலன் விசாரணை நிலுவையில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியை தான் பொன்முடி குறிப்பிட்டு பேசினார் என அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

இதையடுத்து, முன்னாள் அமைச்சருக்கு எதிரான புகார்கள் மீது காவல் துறையினர், புலன் விசாரணை செய்ய தயங்கினால், விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என எச்சரித்த நீதிபதி, பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, அமைச்சராக பதவி வகித்தவர் ஏன் இதுபோல பேச வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சராக இருந்தவர் என்ன சொல்கிறோம் என்பதை புரிந்து பேச வேண்டும். கருத்து சுதந்திரத்தில் கூட நியாயமான கட்டுப்பாடுகள் உள்ளன. 50 ஆண்டுகளுக்கு முன் நடந்த நல்ல விஷயங்களை சொல்லியிருக்கலாம் எனக் கூறிய நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூலை 8-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.

Tags:    

Similar News