தமிழ்நாடு செய்திகள்

கிட்னி திருட்டு வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைத்தது செல்லும்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2025-10-10 16:38 IST   |   Update On 2025-10-10 16:38:00 IST
  • நாமக்கல் மாவட்டத்தில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்கள் விற்கப்பட்டுள்ளது.
  • மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

நாமக்கல் மாவட்டத்தில் ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து சட்ட விரோதமாக சிறுநீரகத்தை தானமாக பெற்றனர். இதற்கு போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை சிறுநீரகங்களை விற்க வற்புறுத்திய நிலையில் இதற்கு திருச்சி மற்றும் பெரம்பலூரில் செயல்பட்ட 2 தனியார் மருத்துவமனைகள் உடந்தையாக செயல்பட்டதாக தெரியவந்தது.

மேலும் குறிப்பிட்ட 2 மருத்துவமனைகளும் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்களுக்கு சொந்தமானது என்பதால் தமிழக அரசு இந்த விவகாரத்தை முறையாக விசாரிக்க வாய்ப்பு இல்லை. எனவே வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என கோரி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சத்தீஸ்வரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல மனுதாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு இந்த சம்பவம் தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது. மேலும் இதில் நீலகிரி, திருநெல்வேலி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகளை விசாரணை அதிகாரிகளாக நியமனம் செய்தும் உத்தரவிட்டது.

மதுரை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொள்வதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அதேவேளையில் கோர்ட்டு பதிவாளர், அதிகாரிகளை நாங்களே தேர்வு செய்வோம் என்று கூறுவதில் தான் சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது' என வாதிட்டார்.

காரணம் விசாரணை அதிகாரிகளை ஆங்காங்கே இருந்து தேர்ந்தெடுத்து ஒரு குழுவை அமைப்பது நிர்வாக ரீதியாக சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் விசாரணைக்கு தேவையான 10 அதிகாரிகளை அரசே பரிந்துரை செய்யும் என்றும், அதில் இருந்து சிறப்பு குழுவை கோர்ட்டு நியமிக்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை என தமிழக அரசு வாதிட்டது.

அதற்கு நீதிபதிகள், சென்னை ஐகோர்ட்டில் இருந்து மட்டும் ஏன் இத்தனை மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு வருகிறது என கேள்வி எழுப்பியதோடு, இந்த விவகாரத்தை பொருத்தவரை முதலில் சி.பி.ஐ. விசாரணை என்பது கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் கோர்ட்டு அனைத்து சாராம்சங்களையும் ஆராய்ந்து சிறப்பு விசாரணை குழுவை ஏற்படுத்தி இருக்கிறது என கருத்து தெரிவித்தனர்.

அதற்கு தமிழ்நாடு அரசு தரப்பு வக்கீல்கள் விசாரணை குழு விசாரணை நடத்துவதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் விசாரணை குழுவில் இடம் பெறும் அதிகாரிகளின் பெயர்களை நாங்கள் பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு விசாரணை குழுவை அமைத்தால் சரியானதாக இருக்கும் என்பது மட்டுமே எங்களது கோரிக்கை என தெரிவித்தனர்.

மேலும் தற்போது கோர்ட்டு தேர்ந்தெடுத்து இருக்கக்கூடிய அதிகாரிகள் கிட்னி திருட்டு சம்பவம் நடைபெற்ற மாவட்டத்தில் இருந்து 200 முதல் 250 கிலோ மீட்டர் தொலைவில் பணியில் உள்ள அதிகாரிகள் ஆவர். இவர்கள் சிறப்பு விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளதால் நிர்வாக ரீதியிலான சிக்கல்களை அரசுக்கு ஏற்படுத்தும்.

எனவே அரசு தரப்பில் அதிகாரிகள் பெயர்களை பரிந்துரை செய்கிறோம். அதில் இருந்து கோர்ட்டு குழுவை அமைக்கட்டும் என்றதோடு கிட்னி திருட்டு நடந்திருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் உள்ள சிறந்த அதிகாரிகளின் பெயர்களை வழங்குகிறோம். அதிலிருந்து கோர்ட்டு தேர்ந்தெடுத்தால் சரியானதாக இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால் சிறுநீரக மோசடி நடைபெற்று இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய மாவட்டத்தில் இருந்து அதிகாரிகளை சிறப்பு குழுவில் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு முரண்படுகிறது என்றதோடு இந்த கோரிக்கையை ஏற்க மாட்டோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், சிறப்பு குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், அதே வேளையில் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்துவதற்காக சிறப்பு குழுவை அமைத்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை உத்தரவுக்குள் தலையிட விரும்பவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

மேலும் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக தெரிவித்திருந்த கருத்துக்களை மட்டும் நீக்குவதாக உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைப்பதாக உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News