தமிழ்நாடு செய்திகள்

மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் விசாரணைக்கு ஆஜராக வந்த காட்சி.

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ. முன்பு விசாரணைக்கு ஆஜரான மின்வாரிய அதிகாரிகள்

Published On 2025-11-10 15:04 IST   |   Update On 2025-11-10 15:04:00 IST
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது மின் தடை செய்யப்பட்டது எப்போது?

கரூர்:

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆம்புலன்சுடன் வந்திருந்த வாகன ஓட்டுநர்களுக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கெனவே சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இதுவரை சுமார் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர்கள் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலக உதவியாளர் குரு சரணிடமும் கடந்த இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் விஜய் பரப்புரையின்போது மின்சாரம் தடை பட்டதால் தான் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி விசாரணை நடத்தி வரும் பொதுப்பணித்துறை அலுவலக சுற்றுலா மாளிகைக்கு வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது மின் தடை செய்யப்பட்டது எப்போது? மின்வாரியத்தினர் யார்? யார்? பணியில் இருந்தனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர்.

அதற்கு மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த விளக்கத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News