தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைமை அலுவலக உதவியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Published On 2025-11-09 13:44 IST   |   Update On 2025-11-09 13:44:00 IST
  • இன்றும் குருசரண் உட்பட 3 பேர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர்.
  • ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

கரூர்:

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி நடைபெற்ற த.வெ.க. பிரசாரக் கூட்டத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் குறித்த வழக்கை சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் இதுவரை பொதுமக்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 6 மற்றும் 7-ந் தேதிகளில் 17 தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று மீண்டும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் என 8 பேரிடம் விசாரணை நடந்தது. ஏற்கனவே ஆஜரான ஒரு சிலர் நேற்றைய விசாரணைக்கும் வந்து விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 3-ம் தேதி சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்துக்கு நேரில் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், கரூரில் நடிகர் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் த.வெ.க. சார்பில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை ஒப்படைக்குமாறு சம்மன் வழங்கியிருந்தனர்.

இதையடுத்து, நேற்று த.வெ.க. அரசு வழக்கறிஞர், சென்னை பனையூர் அலுவலக உதவியாளர் குருசரண் உட்பட 3 பேர் தாந்தோணிமலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தனர். அப்போது, அவர்கள் விஜய்யின் பிரசார வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. வீடியோ காட்சிப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அவற்றை பெற்றுக்கொண்ட சி.பி.ஐ. அதிகாரிகள், அவர்களிடம் சுமார் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இன்றும் குருசரண் உட்பட 3 பேர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராகினர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்றும் பல்வேறு ஆவணங்களை அவர்கள் தாக்கல் செய்யததாக கூறப்படுகிறது. இதனிடையே இன்றும் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

Tags:    

Similar News