இதுதான் உலகமே போற்றும் திராவிட மாடல் மருத்துவக் கட்டமைப்பா..?- நயினார் நாகேந்திரன் கண்டனம்
- நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
- வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்.
கோவை அரசு மருத்துவமனையில் வெகு நேரமாகியும் நோயுற்ற ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்காததால், அவரது மகன் அவரை இழுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
கோவை அரசுப் பொது மருத்துவமனையில் 2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்கப்படாததால், நோயுற்ற தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளி மனதைப் பதைபதைக்க வைக்கிறது.
மலைப்பகுதிகளில் சாலை வசதியின்றி நோயாளிகளைத் தூளி கட்டித் தூக்கிச் செல்வதில் தொடங்கி, பல்நோக்கு மருத்துவமனையில் நோயாளிகளை இழுத்துச் செல்வது வரை மருத்துவத்திற்காக மக்களை அலைக்கழிப்பது தான் "உலகமே போற்றும் மருத்துவக் கட்டமைப்பா" முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே? ஆட்சி முடியும் தருவாயிலாவது, ஆரவார வெற்று விளம்பரத்தை விடுத்து, அடிப்படை மருத்துவ வசதிகளை மேம்படுத்துங்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.