கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமைப் பூங்கா அமைக்க இடைக்கால தடை
- கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் இடத்தில் ஏரியை உருவாக்க முடியும்.
- 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.
மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.
கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் இடத்தில் ஏரியை உருவாக்க முடியும். இதனால் மழை பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்கலாம். ஆனால், 118 ஏக்கர் நிலம், பசுமை பூங்கா அமைக்க தோட்டக்கலை துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஏன் ஏரி அமைக்கக்கூடாது? என்பது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.
இதனால் தமிழக அரசின் தலைமைச் செயலாளரிடம் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமைப் பூங்கா அமைப்பதற்கு தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் ஏரி அமைக்கக் கோரிய மனு மீதான விசாரணையில், தலைமைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யும் வரை பசுமைப் பூங்கா அமைக்க நடவடிக்கை கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணை அடுத்த மாதம் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது .