தமிழ்நாடு செய்திகள்
null

ATM பணப் பரிவர்த்தனை கட்டண உயர்வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2025-03-30 10:52 IST   |   Update On 2025-03-30 15:10:00 IST
  • மகாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்ட பயனாளிகள், ஏற்கனவே நிதி இல்லாமல் தவிக்கின்றனர்.
  • இது டிஜிட்டல் மயமாக்கல் அல்ல. இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல்.

வங்கிகள் மாத வரம்பிற்கு மேல் ஏடிஎம் பணம் எடுப்பதற்கு ரூ. 23 வரை வசூலிக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணங்களை அதிகரிக்க வங்கிகளை அனுமதித்து ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்தது. எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.

இந்த முடிவை விமர்சித்து மு.க,.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள் என்று ஒன்றிய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டுவந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.

அடுத்து… டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத் தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்-இல் பணம் எடுக்கும் ஒவ்வொருமுறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேரவேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும்.

ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள் ஆகியோர்தான் இதனால் இருப்பதிலேயே அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இது டிஜிட்டல்மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையைத் தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News