தமிழ்நாடு செய்திகள்

கோவையில் வெளுத்து வாங்கும் கனமழை: சூறாவளி காற்றுக்கு வீட்டின் மேற்கூரை சேதம்

Published On 2025-05-27 10:40 IST   |   Update On 2025-05-27 10:40:00 IST
  • வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது.
  • மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது.

வால்பாறை:

கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால் கடந்த 3 தினங்களாக கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. ஏரிகள், குளங்கள், குட்டைகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது.

வால்பாறையில் கடந்த சில தினங்களாக மழை கனமழை பெய்தது. நேற்றும் மழை நீடித்தது.

வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த மழைக்கு நேற்று இரவு வால்பாறை அடுத்த சோலையார் எஸ்டேட் செல்லும் வழியில் முனீஸ்வரன் கோவில் பகுதியில் மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

இதேபோல் மானாம்பள்ளி மின் உற்பத்தி நிலையத்திற்கு செல்லும் சாலை, கருமலை எஸ்டேட் பகுதியில் குரூப் ஆபிஸ் அருகேயும் மரம் விழுந்தது.


வால்பாறை தலைநார், சக்தி எஸ்டேட் பகுதிகளில் மின் கம்பத்தின் மீது மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதிகளில் 2 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு அந்த பகுதியே இருளாக காட்சியளிக்கிறது. அதேபோன்று பெரியகல்லாறு, சின்னகல்லார் ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இன்று காலை வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 6-வது கொண்ைட ஊசி வளைவில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. தீயணைப்பு துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதேபோல் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆங்காங்கே என 10க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

தொடர் கனமழையுடன் வீசிய சூறாவளி காற்றுக்கு சோலையார் அணை பகுதி சத்யா நகரில் உள்ள சுதர்சனன் என்பவரின் வீட்டின் மேல் கூரை காற்றில் பறந்து சேதம் அடைந்தது. அங்கு இருந்தவர்கள் மீட்கப்பட்டு சோலையார் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம், காரமடை, அன்னூர், சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

கோவை மாநகரில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. மதியத்திற்கு பிறகு கனமழை வெளுத்து வாங்கியது. இரவிலும் இந்த மழை நீடித்தது. மழையால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோவையில் பெய்து வரும் மழை காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து அங்கிருந்து குளங்களுக்கும் தண்ணீர் செல்கிறது. இதனால் கோவையில் உள்ள குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன.

கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லாரில் 11 செ. மீ மழை பதிவாகி உள்ளது.

மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

சின்னக்கல்லார்-116, சின்கோனா-70, சிறுவாணி அடிவாரம்-86, வால்பாறை பி.ஏ.பி-58, வால்பாறை தாலுகா-55, சோலையார்-61.

Tags:    

Similar News