திருச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை- ஒரே நாளில் 1060 மில்லி மீட்டர் மழை பதிவு
- மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
- தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 395 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
நேற்று வழக்கம்போல் பகலில் வெயில் அடித்தது. பின்னர் மாலை இடி மின்னலுடன் கூடிய மழை தொடங்கியது.
தொடர்ந்து இரவு 8 மணி அளவில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இந்த மழை சுமார் 2 மணி நேரம் நீடித்தது. அதன் பின்னர் அதிகாலை 3 மணி வரை சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.
இதேபோன்று புறநகர் பகுதிகளான லால்குடி சமயபுரம் மணப்பாறை மருங்காபுரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
இந்த மழையின் காரணமாக இரவு வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது. தொடர் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1060.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பகுதி வாரியாக மழை அளவு விபரம் வருமாறு;-
கல்லக்குடி 107.4, லால்குடி 30.4, நந்தியாறு அணைக்கட்டு 67.4, புள்ளம்பாடி 116, தேவி மங்கலம் 20.2 சமயபுரம் 36.4, சிறுகுடி 40, வாத்தலை அணைக்கட்டு 11.8, மணப்பாறை 24.4, பொன்னணியாறு அணை 4, கோவில்பட்டி 52.4, மருங்காபுரி 43.4 முசிறி 15, புலிவலம் 8, தாப்பேட்டை 20, நவலூர் கொட்டப்பட்டு 31, துவாக்குடி 14, கொப்பம்பட்டி 27, தென்பர நாடு 40, துறையூர் 52, பொன்மலை 77.2, திருச்சி ஏர்போர்ட் 96.6, திருச்சி ஜங்ஷன் 66, திருச்சி டவுன் 60.