அம்பை சுற்று வட்டாரத்தில் கனமழை- நனைந்து வீணான நெல் மூட்டைகள்
- நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாலையிலும் பரவலாக மழை பெய்தது.
- தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பரவலாக நேற்று மாலையில் மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலை மிஞ்சும் வகையில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரத்தில் திடீர் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாநகர பகுதியில் தொடர்ந்து 2-வது நாளாக நேற்று மாலையிலும் பரவலாக மழை பெய்தது. டவுன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் மழைநீர் ஓடியது.
மாநகரை பொறுத்தவரை அதிகபட்சமாக நெல்லையில் 13 மில்லிமீட்டரும், பாளையில் 12 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மூலைக்கரைப்பட்டி சுற்று வட்டாரத்தில் லேசான சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் வானில் கருமேகம் திரண்டு காணப்பட்டது. குளிர்ச்சியான காற்று வீசியதோடு, பலத்த இடி-மின்னலும் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் கார் சாகுபடியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது அம்பை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் நெற்கதிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் நெற்கதிர்கள் வயலில் சாய்ந்தன.
மேலும் மழை காரணமாக கார் சாகுபடிக்கான அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அறுவடை செய்து மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல்மணிகளும் மழையில் நனைந்து சேதமாகியுள்ளது.
குறிப்பாக மணிமுத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கார் சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடை பணிகள் சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திடீரென பெய்த மழை காரணமாக நெல் அறுவடை பணிகள் அங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே அறுவடை செய்யப்பட்டு மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளும், கொள்முதல் செய்வதற்காக குவியல் குவியலாக வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளும் மழையில் நனைந்து நாசமாகியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அணைகளை பொறுத்தவரை மணிமுத்தாறு அணையில் 17 மில்லிமீட்டரும், சேர்வலாறில் 5 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. மாஞ்சோலை வனப்பகுதியில் குளிர்ந்த காற்று வீசியதோடு, விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பரவலாக நேற்று மாலையில் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள சிவகிரி சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்துள்ளது. அங்கு 10 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ஆலங்குளம் அருகே உள்ள ஊத்துமலை, சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஊத்துமலை அருகே பலபத்திரராம புரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவேங்கடத்தில் 6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் நடுவக்குறிச்சி, பழங்கோட்டை பகுதியிலும் பலத்த மழை பெய்துள்ளது.