தமிழ்நாடு செய்திகள்

திருவள்ளூர் அருகே சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து- 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2025-07-14 08:01 IST   |   Update On 2025-07-14 08:01:00 IST
  • மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன.
  • இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு ரெயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அதுபோல் 52 வேகன்களில் டீசல் நிரப்பிய சரக்கு ரெயில் ஒன்று நேற்று அதிகாலை மணலியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் வந்தபோது ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 18 டேங்கர்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வானுயரத்திற்கு புகை மூட்டம் சூழ்ந்தது.

இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து வெளியூர் சென்று வரும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

தீ விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த வேகன்களுக்கும் பரவி, மளமளவென பற்றி எரிந்தது. யாரும் அதன் அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் சுமார் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக போராடி தீயை அணைத்தனர். அதாவது காலை 5.30 மணிக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ, மதியம் 2 மணி அளவில் அணைக்கப்பட்டது.

இந்த பகுதியில் மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. முதலில் ஒரு தண்டவாளத்தை சரி செய்து மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், சரக்கு ரெயில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்ட நிலையில் 17 மணி நேரத்திற்கு பின்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இருப்பினும், அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் மின்சார ரெயில்கள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.

சரக்கு ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் மெதுவாக ரெயில்கள் இயக்கப்படுகின்றன. புறநகர் ரெயில் பாதையிலேயே எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இன்று மாலை முழுமையாக பணிகள் நிறைவு பெற்று ரெயில் போக்குவரத்து வழக்கம் போல் நடைபெறும் என தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News