மணலி புதுநகரில் தொழிற்சாலையில் இரும்பு கேட் சரிந்து விழுந்து காவலாளி பலி
- பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
- சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவொற்றியூர்:
மணலி புதுநகரை அடுத்த வெள்ளிவாயல் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 64). இவர் விச்சூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். கடந்த 14ஆம் தேதி காலை 9 மணியளவில் கம்பெனியின் மெயின் கேட்டை மூடும்போது எதிர்பாராத விதமாக கேட் அடியோடு சரிந்து குமாரசாமி மேல் விழுந்தது.
இதைப்பார்த்த அருகில் இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்து கேட்டுக்குள் சிக்கிய குமாரசாமியை வெளியே எடுத்தனர். இதில் கால், மார்பு பகுதியில் அடிபட்டு பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குமாரசாமியை சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த குமாரசாமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.