தமிழ்நாடு செய்திகள்

போதை மருந்து விற்று கார்-நகைகள் வாங்கி குவித்த நிதி நிறுவன அதிபர்

Published On 2025-06-18 14:57 IST   |   Update On 2025-06-18 14:57:00 IST
  • குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

கோவை:

கோவை மாநகர பகுதியில் கஞ்சா மற்றும் போதை மருந்துகள் விற்பனையை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

போலீசார் அடிக்கடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கஞ்சா, போதை மருந்து விற்பவர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து சிலர் கோவைக்கு வந்து போதை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனால் அதுபோன்று வருபவர்களையும், அவர்கள் தங்கி இருக்கும் இடங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிசேகரன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வாலிபர் ஒருவர் நின்றிருந்தார். சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

கஞ்சா மற்றும் போதை மாத்திரையுடன் சிக்கியவர் திண்டுக்கல் மாவட்டம் துப்பச்சம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது37) என்பது தெரியவந்தது. இவர் அங்கு நிதி நிறுவனம் வைத்து தொழில் செய்து வந்தார்.

அப்போது போதைப்பொருள் விற்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்த சதீஷ்குமார், அதன்பிறகு கஞ்சா மற்றும் போதை மாத்திரை மற்றும் போதைப்பொருட்களை வாங்கியும் விற்பனை செய்து வந்துள்ளார்.

கோவையில் இவருக்கு உறவினர்கள் இருந்துள்ளனர். இதனால் அடிக்கடி இங்கு அவர்களை பார்க்க வருவது போல வந்து, கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை விற்று வந்ததும் தெரியவந்தது.

பின்னர் கோவைப்புதூரில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து அங்கு கஞ்சா மற்றும் போதை பொருட்களை பதுக்கி வைத்து தேவைப்படுபவர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.

மெத்தபெட்டமைன் எனப்படும் உயர்ரக போதைப்பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் விற்பனையாவதால், அதனையும் வாங்கி சதீஷ்குமார் விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் போதைப்பொருள் விற்ற பணத்தை கொண்டு சதீஷ்குமார் பிரெஸ்லெட், மோதிரங்கள் என தங்க நகைகள் மற்றும் விலை உயர்ந்த கார் ஒன்றையும் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சதீஷ்குமார் தங்கி இருந்த கோவைப்புதூர் பகுதியில் உள்ள அறைக்கு சென்று சோதனை நடத்தி அங்கிருந்த 525 கிராம் கஞ்சா மற்றும் மெத்தபெட்டமைன் என்ற உயர் ரக போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவரிடம் இருந்து நகைகள் மற்றும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

நிதிநிறுவன அதிபர் என கூறிக்கொண்டு, போதைப்பொருள் விற்று, அதில் சம்பாதித்த பணத்தில் நகைகளை அணிந்து கொண்டு காரில் வலம் வந்த சதீஷ்குமார், போலீசாரின் சோதனையில் சிக்கி கொண்டார்.

Tags:    

Similar News