தமிழ்நாடு செய்திகள்

காதலிக்காக நகை பறித்த என்ஜினீயர் கைது- நண்பரின் தாயாரிடமே கைவரிசை காட்டியது அம்பலம்

Published On 2025-09-18 09:02 IST   |   Update On 2025-09-18 09:02:00 IST
  • நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக தெரிகிறது.
  • ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன்.

நாகர்கோவில்:

குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பள்ளியாடி முருங்கவிளை பகுதியை சேர்ந்தவர் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் (வயது 29). இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு திருவட்டார் பகுதியை சேர்ந்த ஆனந்த் (26) என்பவர் பெயிண்டிங் வேலைக்கு வந்தார். அப்போது அவருடன் ஆனந்துக்கு நட்பு ஏற்பட்டது. அதே சமயத்தில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசரின் தாயார் ரெஜி (63) உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு நட்பு அடிப்படையில் ஆனந்த் அவ்வப்போது உதவிகள் செய்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டுக்கு வந்தார். அங்கு அவருடைய தாயார் அழுது கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதற்கான காரணத்தை கேட்ட போது, கழிவறையில் தான் திடீரென மயங்கியதாகவும், பிறகு கண் விழித்த போது தான் அணிந்திருந்த நகை, கம்மல் உள்பட 11 பவுன் நகையை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளார். உடனே இதுபற்றி தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் நகை பறித்தது, ஆனந்த் என்பது தெரியவந்தது. அவரை போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் பி.இ. படித்து விட்டு அதற்குரிய வேலை கிடைக்காமல் இருந்ததால் பெயிண்டிங் வேலை செய்து வந்தேன். ஒரு பெண்ணை காதலித்தேன். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்திருந்தேன். ஏழையான காதலிக்கு நகை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டேன். ஆனால் போதுமான பணம் இல்லை. இந்தநிலையில் ஜெய்சன் ஆர்.ஜெபனேசர் வீட்டிற்கு சென்றபோது அவரது தாயார் கழிவறையில் மயங்கி கிடந்தார். மேலும் நகை, கம்மல் அணிந்திருந்தார். இதனை பார்த்ததும் எனது எண்ணம் தவறான பாதைக்கு மாறியது. அந்த நகையை பறித்து காதலிக்கு கொடுக்க முடிவு செய்தேன். அதன்படி 11 பவுன் நகையை பறித்து விட்டு ஒன்றும் தெரியாதது போல் இருந்தேன். ஆனால் போலீஸ் விசாரணையில் மாட்டிக் கொண்டேன். இவ்வாறு வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News