தமிழ்நாடு செய்திகள்

சட்டசபையில் அ.தி.மு.க.வுக்கு பேச அனுமதி மறுக்கப்படுகிறது- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published On 2025-04-08 14:05 IST   |   Update On 2025-04-08 14:05:00 IST
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களை பற்றி கடுமையான விமர்சிக்கிறார்.
  • தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்.

சென்னை:

சட்டபேரவை வளாகத்தில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சட்டமன்றத்தில் பேசுவதற்கு பிரதான எதிர்க்கட்சிக்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஆனால் மற்ற கட்சித் தலைவருக்கு வாய்ப்பு கொடுப்பது எந்த விதத்தில் நியாயம்.

நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பேச அனுமதி கொடுக்க வேண்டும் என்று அவை முன்னவர் சொன்ன பிறகு தான் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சபாநாயகர் ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருகிறார்.

நாங்கள் மக்கள் பிரச்சனையை சுட்டி காட்டுகிறோம். எங்கள் உறுப்பினர்கள் கேள்வி கேட்பதை காண்பிப்பது இல்லை. அமைச்சர் பதில் சொல்வதை காட்டுகிறார்கள். இரண்டையுமே காட்டினால் தான் மக்களுக்கு தெரியும்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களை பற்றி கடுமையான விமர்சிக்கிறார். அது அவை குறிப்பில் இடம் பெறுகிறது. ஆனால் மக்கள் பிரச்சனையை நாங்கள் பேசினால் அதை அவை குறிப்பில் இருந்து நீக்குகிறார்கள்

தில்லு, திராணி, தெம்பு இருந்தால் எங்களை ஏன் வெளியேற்றுகிறீர்கள். கோழை தனமாக திட்டமிட்டு அ.தி.மு.க. உறுப்பினர்களை வெளியேற்றி விட்டு எங்கள் மீது கடுமையான விமர்சனங்களை பதிவு செய்வது எந்த விதத்தில் நியாயம் ஆகும்.

எங்கள் உரிமைகளை பறிக்கும்போது நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம். நான் முதலமைச்சராக இருந்தபோது மு.க.ஸ்டாலின் எத்தனை முறை வெளிநடப்பு செய்துள்ளார்.

இன்னும் 9 மாத காலத்துக்கு பிறகு தி.மு.க. ஆட்சி இருக்காது. எதிர்க்கட்சியாக கூட தி.மு.க. இருக்காது. அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மு.க. ஸ்டாலின் அகம்பாவத்தில் இருக்கிறார்.

பிரதமர் மோடி வரும் போது கருப்பு கொடி காட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தபிறகு, வெள்ளை கொடி பிடிக்கிறார். எனவே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணி கட்சிகள் உஷாராக இருக்க வேண்டும்.

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பேச முற்பட்ட தங்களை அவையிலிருந்து வெளியேற்றம் செய்துவிட்டு, தமிழக முதலமைச்சர் தங்களை அவதூறாக பேசி இருப்பது கோழைத்தனத்தின் உச்சமாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News