ஸ்ரீகாந்த் தொடர்புடைய போதைப்பொருள் வழக்கு: போலீசார் ரூ.50 லட்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு
- ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
சென்னையில் கொகைன் போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதன் தொடர்ச்சியாக 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயன்படுத்தியது தொடர்பாக பிரதீப் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலருக்கு தனிப்படை போலீசார் சம்மன் அனுப்பினார்கள்.
இதனை ஏற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பலரிடம் உங்களை கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் பணம் கொடுக்க வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஒருவரும் 2 சப்- இன்ஸ்பெக்டர்களும் மிரட்டி லட்சக்கணக்கில் வசூல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இவர்கள் 3 பேரும் சேர்ந்து லஞ்சம் பெற்றிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 50 லட்சம் வரை பணம் கைமாறி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் 2 சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 3 பேரின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.